பர்ஹானா முஸ்லிம்களுக்கு எதிரான படமல்ல
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம் பர்ஹானா. கடந்த 12ம் தேதி வெளிவந்தது. இந்த படத்தில் முஸ்லிம் சமுதாயத்தினர் இழிபடுத்தப்பட்டிருப்பதாக பரவலாக தகவல்கள் வெளியானது. சில ஊர்களில் படத்திற்கு எதிராக போராட்டம் நடந்ததால் படம் நிறுத்தப்பட்டது. தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் ஆகியோர் விளக்கம் கொடுத்தும் அதனை ஏற்கவில்லை. படம் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல அப்படி யாராவது கருதினால் அவர்களுக்கு படத்தை போட்டுக்காட்ட தயார் என்று அறிவித்தனர்.
இதை தொடர்ந்து நேற்று முஸ்லிம் சமுதாய மற்றும் கட்சி பிரமுகர்களுக்கு படம் போட்டுக் காட்டப்பட்டது. இதை தொடர்ந்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் உமர் பாருக் வெளியிட்ட பதிவில், ‛‛பர்ஹானா திரைப்படக்குழுவினின் அழைப்பின் பேரில் முஸ்லிம் சமுதாய தலைவர்களுக்கு பிரத்யேமாக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அப்படத்தை காண பல சமூக தலைவர்களும் பங்கேற்றபோது எஸ்டிபிஐ கட்சி சார்பாக நாங்களும் பார்த்தோம்.
படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் காட்சிகளோ அல்லது சமூகத்தின் மனது புண்படும்படியான வசனங்களோ இடம் பெறவில்லை. எனவே யூகத்தின் அடிப்படையில் இதுவரை பேசப்பட்டவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஒரு ஏழை முஸ்லிம் குடும்பத்தின் கதை களத்தை மையமாக கொண்டு இயக்குனர் கதையை நகர்த்தி உள்ளார். அதில் சில படிப்பினைகளும் உள்ளன. மற்றபடி தவறான சித்தரிப்புகள் இப்படத்தில் இல்லை என்பதால் பர்ஹானா படத்தின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.