அகமதாபாத்: பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 198 இந்திய மீனவர்களில் 184 பேர் குஜராத் வந்தடைந்தனர்.
அரபிக்கடலில் குஜராத்தை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் பாகிஸ்தான் கடலோர காவல் படையால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு சுமார் 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர்களை விடுவிக்க மத்திய அரசு தூதரக ரீதியில் நடவடிக்கைகளை எடுத்தது. இதையடுத்து, பாகிஸ்தான் சிறையில் உள்ள 198 இந்திய மீனவர்கள் கடந்த 13-ம் தேதி விடுவிக்கப்பட்டனர்.
இவர்களில் 184 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். 3 பேர் ஆந்திரப் பிரதேசத்தையும், 4 பேர் டையூவையும், 5 பேர் மகாராஷ்ட்ராவையும், 2 பேர் உத்தரப் பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் பஞ்சாபின் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
அவ்வாறு அனுப்பிவைக்கப்பட்ட குஜராத்தைச் சேர்ந்த 184 மீனவர்கள் இன்று வடோதரா வந்தடைந்தனர். ரயில் மூலம் வந்த அவர்களை வதோதரா ரயில் நிலையத்தில் மாநில மீன்வளத் துறை அமைச்சர் ராகவ்ஜி படேல் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து 4 பேருந்துகள் மூலமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.