பாரீஸ்: உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழக்கத் தயாராக இருப்பதாக பிரான்ஸ் அதிபர் மக்ரோன் உறுதியளித்துள்ளார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரான்ஸ் அதிபர் மக்ரோனை அதிபர் மாளிகையில் சந்தித்தார். இந்த சந்திப்பு மூன்று மணி நேரம் நடந்தது. உக்ரைனில் ரஷ்யாவால் கைப்பற்றபட்ட பகுதிகளை மீட்க ஜெலன்ஸ்கி தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் பிரான்ஸிடம் ஆயுத உதவிக்கான கோரிக்கையை அவர் வைத்திருக்கிறார். அதன்படி, பீரங்கி டாங்கிகள், கனரக வாகனங்கள், எரிபொருள், ஆயுதங்கள் வழங்க பிரான்ஸ் உறுதியளித்துள்ளது.
மேலும், இந்த ஆண்டு உக்ரைனின் 2,000 ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்க இருப்பதாக, 4,000 பேர் போலாந்தில் பயிற்சி பெற இருக்கிறார்கள் என்றும் பிரான்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பிரான்ஸ் பயணம் குறித்து ஜெலன்ஸ்கி ட்விட்டர் பக்கத்தில், “எனது ஒவ்வொரு பயணத்தின் மூலமும் உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திறன்கள் விரிவடைகின்றன. ஐரோப்பாவுடனான உறவுகள் வலுவடைந்து வருகின்றன. ரஷ்யா மீதான அழுத்தம் அதிகரித்து வருகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முன்னதாக ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கும் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ஜெர்மன் அதிபர் ஸ்கோல்ஸ் உடனான சந்திப்பு குறித்து ஜெலன்ஸ்கி கூறும்போது, “ ஜெர்மனி அளித்த பீரங்கிகள், வாகனங்கள் உக்ரேனியர்களின் உயிர்களைக் காப்பாற்றி, வெற்றியை நெருங்க உதவின. ஜெர்மனி நம்பகமான நட்பு நாடு!” என்று தெரிவித்துள்ளார்.
இதுவரை ஜெர்மனி 17 பில்லியன் யூரோக்களை உக்ரைனுக்கு உதவியாகக் கொடுத்துள்ளது என்றும் எதிர்காலத்தில் இன்னும் கூடுதலான உதவிகள் வழங்கப்படும் என்றும் ஜெர்மனி அதிபர் ஸ்கோல்ஸ் தெரிவித்துள்ளார்.