சென்னை : நகைச்சுவை நடிகர் மனோபாலா, கஜேந்திரன், மயில்சாமி ஆகியோரின் மறைவை ஒட்டி தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.
கார்த்தி, பூச்சி முருகன், தேவயானி, மன்சூர் அலிகான், அனு மோகன் , டெல்லி கனேஷ், பொன்வண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய நடிகர்கள் பலர் உருக்கமாக கண்கலங்கி பேசினர்
நினைவேந்தல் : இந்த நிகழ்ச்சியில் பேசிய டெல்லி கணேஷ் இயக்குனர் டி.பி கஜேந்திரன் தனது நகைச்சுவையான படங்களை தயாரித்து பெயர் எடுத்தார். அவரது மறைவில் இருந்து நான் மீண்டு வருவதற்குள் அடுத்தடுத்து மரணங்கள், மனோபாலா சினிமாவிற்கு வருவதற்கு முன்பிருந்தே எனக்குத் தெரியும்.அவரது வளர்ச்சியை படிப்படியாக தான் பார்த்து மகிழ்ந்து இருக்கிறேன்.
அழாமல் பேசமுடியாது : பெயர், பணம், புகழ் அனைத்தும் இருந்தும் இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு சென்று விட்டார். மனோபாலா அனைவருக்கும் நல்ல நினைவுகளை பரிசாக கொடுத்து இருக்கிறார். அவரை பற்றி பேசும் போது, அழாமல் பேசுவது சிரமம். அவர் நிச்சயம் இன்னும் பத்தாண்டுகள் தாராளமாக இருந்து இருக்கலாம், இவர்கள் மூவரும் நம்முடன் இருந்திருக்க வேண்டியவர்கள் என்ற டெல்லி கணேஷ் கண் கலங்கினார்.
மனம் ஏற்க மறுக்கிறது : இதையடுத்து பேசிய மன்சூர் அலிகான், படப்பிடிப்பின் போது நானும் மனோபாலாவும் அட்டகாசம் செய்வோம்,எப்போது கிண்டலடித்துக்கொண்டு சிரித்துக்கொண்டே இருப்போம், இவர் இப்போது இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றார்.
200 படங்கள் : பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மனோபாலா, 1982 ஆம் ஆண்டு ஆகாய கங்கை படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமானார். இயக்குநராக மட்டுமில்லாமல் 200க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.
உயிரிழந்தார் : கல்லீரல் பிரச்னை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த மனோபாலா, 15 நாட்களாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வாரம் உயிரிழந்தார்.பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுபின், மின் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.