\"மெகா பிரச்சினை..\" கையை பிசையும் சீனா.. சாதனையே சோதனையாக மாறியது.. இந்தியாவுக்கான வார்னிங்

பெய்ஜிங்: சீனாவில் மக்கள்தொகை சரிவது என்பது மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதனிடையே நிலைமையைச் சரி செய்ய அந்நாட்டு அரசு புதியதொரு திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

சீனாவில் மக்கள் தொகை மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. கடந்த 30, 40 ஆண்டுகளாக அங்கே மக்கள் தொகை அதிகரிக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்கள்.

குறிப்பாக ஒரு குழந்தை பாலிசி எடுத்து வந்தார்கள். அதாவது ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் அவர்கள் அரசு வேலைகளில் சேர முடியாது. மேலும், பல்வேறு சலுகைகளும் ரத்து செய்யப்பட்டன.

சீனா: அதேபோல திருமணமாகாத பெண்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்ளவும் தடை இருந்தன. சீனாவில் அவர்கள் இந்த கட்டுப்பாடுகள் மிகக் கடுமையாகப் பாலோ செய்தனர். இதனால் மக்கள் தொகை வெகுவாக குறைந்தது. நல்ல செய்தி தானே.. அவர்கள் திட்டப்படி மக்கள் தொகை குறைந்து உள்ளது தானே எனக் கேட்கலாம். ஆனால், விஷயம் என்னவென்றால், இப்போது மக்கள் தொகை குறைவதே அவர்களுக்குப் பிரச்சினை.

மக்கள் தொகை குறைவது என்றால் குழந்தை பிறப்பு விகிதம் குறைகிறது என்றே அர்த்தம். இதனால் சில ஆண்டுகளில் வேலை செய்யும் வயதில் உள்ள இளைஞர்களின் மக்கள் தொகை வெகுவாக குறையும் வயதானவர்களின் மக்கள் தொகை அதிகரிக்கும். இதனால் சீனாவின் பொருளாதாரம் மிகப் பெரிய இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்படும். ஜப்பானில் அவர்கள் கிட்டதட்ட அதே பிரச்சினையைத்தான் இப்போது எதிர்கொண்டுள்ளனர்.

மக்கள்தொகை: சீனாவின் மக்கள் தொகையை மீட்டெடுக்க இப்போது அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.. அதன்படி இப்போது 20+ நகரங்களில் முதலில் சோதனை அடிப்படையில் திட்டம் ஒன்றை அமல்படுத்தியுள்ளனர். “புதிய சகாப்த” திருமணம் மற்றும் குழந்தைப்பேறு கலாச்சாரத்தை உருவாக்க இந்தத் திட்டத்தை அவர்கள் தொடங்கியுள்ளனர். நாட்டில் குழந்தை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

அதன்படி சீனாவின் குடும்பக் கட்டுப்பாடு சங்கம், பெண்கள் திருமணம் மற்றும் குழந்தைகளைப் பெற ஊக்குவிக்கும் திட்டங்களை ஆரம்பிக்க உள்ளனர். திருமணத்தை ஊக்குவித்தல், தகுந்த வயதில் குழந்தைகளைப் பெறுதல், குழந்தை வளர்ப்புப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளப் பெற்றோரை ஊக்குவித்தல் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய நகரங்கள்: சீனாவின் உற்பத்தி மையமான குவாங்சோ மற்றும் ஹெபே மாகாணத்தில் உள்ள ஹண்டான் ஆகியவையும் இந்த டெஸ்டிங்கில் இருக்கிறது. இந்தச் சங்கம் ஏற்கனவே கடந்த ஆண்டு பெய்ஜிங் உட்பட 20 நகரங்களில் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை மேலும் 20 நகரங்களுக்கு விரிவுபடுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்தத் திட்டங்கள் மூலம் நாட்டில் இருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

வரிச் சலுகைகள், வீட்டு மானியங்கள் மற்றும் மூன்றாவது குழந்தைக்கு இலவச கல்வி அல்லது கல்வி மானியம் எனக் குழந்தைகள் பெறுவதை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை இவர்கள் ஊக்குவித்துள்ளனர்.

ஒரு குழந்தை கொள்கை: சீனா 1980 முதல் 2015 வரை கடுமையான ஒரு குழந்தை கொள்கையை அமல்படுத்தியது. இதன் மூலமே சீனா இப்போது இந்தப் பெரிய பிரச்சினையை எதிர்கொள்கிறது. இந்தியாவிலும் இப்போது மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த கொள்கைகள் இருக்கிறது என்ற போதிலும், அது இவ்வளவு கடுமையாகப் பின்பற்றப்படுவதில்லை. இதன் காரணமாகவே சீனாவை ஓவர்டேக் செய்து மக்கள் தொகை அதிகமுள்ள நாடாக இந்தியா சென்றது.

தனது பிரச்சினையை லேட்டாகவே உணர்ந்த சீனா, தனது கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்தது. முதலில் இரண்டு குழந்தைகள் பெறவும் அடுத்து மூன்றாவது குழந்தைக்கும் சலுகைகளை அறிவித்தனர். மேலும், திருமணமாகாத பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது என்ற தடையும் நீக்கப்பட்டது.

கவலைகள்: கடந்த 60 ஆண்டுகளில் சீனா இப்போது தான் மக்கள்தொகை சரிவு குறித்துக் கவலைப்பட்டுள்ளது. சீனாவில் அதிகரிக்கும் வயதானோரின் மக்கள் தொகை, திருமணங்கள் குறைவது உள்ளிட்டவை பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது.

உலகின் அனைத்து நாடுகளையும் போலவே பாலின பாகுபாடும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளப் பெண்களைத் தயங்க வைக்கிறது. குழந்தைப் பராமரிப்பு செலவினம், கேரியரை விட்டுத் தர வேண்டும் உள்ளிட்டவற்றால் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவதில்லை.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.