வடமாநில தொழிலாளர்கள் மீது தீ வைத்த தமிழர்கள்.. போலிச் செய்தி உண்மையானதா.?

வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

ரயில் நிலையம் முன்பு தமிழக ஆளுநர் ரவியை கண்டித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்!!

தமிழகத்தில் சிலநாட்களுக்கு முன்பாக வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோக்கள் பரவியது. இந்தி மொழி பேசியதாலேயே அந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வடமாநில ஊடகங்களும் போலி செய்தியை வெளியிட்டன. அதையடுத்து தமிழகத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியில் அச்சம் எழுந்தது. குறிப்பாக பீகார் மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக அம்மாநில பாஜகவினர் மற்றும் இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்கள் போலி செய்தியை பரப்பினர்.

ஆனால் இது குறித்து பீகார் அரசு தமிழ்நாடு அரசை தொடர்பு கொண்டபோது இது வதந்தி என தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலிச் செய்திகளை பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வர் முக ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கலந்து கொண்ட சில நாட்களில் இத்தகைய போலிச் செய்திகளை பாஜகவினர் பரப்பியதாக கூறப்படுகிறது.

அதையடுத்து தமிழத்திலும், வடமாநிலத்திலும் இந்த போலிச் செய்திகள் வைரலானது. தேசிய ஊடகங்களில் இது விவாதத்திற்குள்ளானது. இந்த போலிச் செய்தி மனநிலை கொஞ்சம் அடங்கிய நிலையில், தற்போது மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில்,

‘‘நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் அருகில் உள்ள சரளைமேடு கிராமத்தில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிப்பு தொழிலகத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றியுள்ளனர். நேற்று முன்தினம் (13.05.2023) இவர்கள் தங்கியிருந்த கொட்டகையை உடைத்து, உள்ளே மண்ணெண்ணெய் நனைத்த துணியில் தீ வைத்து வீசியுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் நான்கு வட மாநிலத் தொழிலாளர்கள் தீக்காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வட மாநிலத் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. கடந்த மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரத்திலிருந்து இப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதுடன் ஆங்காங்கு சில தீ வைப்பு குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துள்ளன. இதன்மீது காவல் துறை இன்னும் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட்டிருக்க வேண்டும்.

வட மாநிலங்களிலிருந்து வேலை தேடி தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்துள்ள நிலையில், மோதலை உருவாக்கும் வெறுப்பு அரசியல் சக்திகளின் ஊடுருவல் குறித்து விசாரித்து உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’’ என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.