சமீபத்தில் மறைந்த நடிகர்களான மனோபாலா, டி.பி.கஜேந்திரன், மயில்சாமி ஆகியோருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நேற்று மாலை நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
சென்னை சர்.பி.டி. தியாகராய ஹாலில் நடந்த இந்நிகழ்வில் நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி, நடிகர் சங்கத் துணைத்தலைவர் பூச்சி முருகன், தமிழ் தயாரிப்பாளார்கள் சங்கச் செயலாளர் ராதா கிருஷ்ணன், தயாரிப்பாளர் டி.சிவா, பெப்சி துணைத் தலைவர் சுவாமிநாதன், திரைப்பட கல்லூரி தலைவர் நடிகர் ராஜேஷ், நடிகை சச்சு, ரோஹிணி, தேவயானி, நடிகர் சரவணன், பசுபதி, அஜய் ரத்னம், மன்சூர் அலிகான், பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மனோபாலா, டி.பி.கஜேந்திரன், மயில்சாமி ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பிரபலங்கள் பலரும் மறைந்த கலைஞர்களுடனான தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
நடிகர் டெல்லி கணேஷ் பேசும்போது, “மனோபாலா நடிகர் ஆவதற்கு முன்பிருந்தே எனக்குப் பழக்கமானவர். இப்போதுகூட கைநிறைய படங்களை வைத்திருந்தார். அதேபோல மயில்சாமி ஒரு தைரியமான ஆள். நானும் மயில்சாமியும் சுந்தர்.சி இயக்கிய `லண்டன்’ படத்தில் இணைந்து நடித்தபோது அவ்வளவு சந்தோசமான அனுபவங்களாக இருந்தது. டி.பி கஜேந்திரன் நல்ல காமெடி படங்களை கொடுத்துள்ளார். அவர் படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ஒரு குறிப்பிட்ட வயதுக்கு முன்னாடியே இப்படி நமக்குப் பிடித்தமானவர்கள் இறப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இவர்கள் இன்னும் பத்து வருடம் இருந்திருக்கலாம். அவர்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று பேசினார்.
நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி பேசும்போது, “இந்த மூன்று பேருமே மக்களை மகிழ்வித்துள்ளனர். டி.பி.கஜேந்திரன் எப்போதுமே பாசிட்டிவ் எண்ணம் கொண்டவர். ஆளுமை மிக்கவர். மயில்சாமியுடன் `சிறுத்தை’ படத்தில் இணைந்து நடித்தேன். `தனக்கு மிஞ்சியதுதான் தானம்!’ என்று சொல்வார்கள். ஆனால் ஒரு மனிதன் கடன் வாங்கி தானம் செய்கிறான் என்றால் அது மயில்சாமி ஒருவராகத்தான் இருக்கும். என்னிடத்தில் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் தனக்காக எதுவும் கேட்க மாட்டார்.
யாராவது ஒருவருக்கு உதவி செய்வதற்காக தான் அவரது அழைப்பு வரும். எம்ஜிஆரின் கொள்கைகளைப் பின்பற்றி வாழ்ந்து மறைந்துள்ளார். இப்படி அவரைப்பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். மனோபாலாவைப் பொறுத்தவரை பல நிகழ்வுகளில் அவரே பொறுப்பை எடுத்துக் கொள்வார். ஏதாவது வாக்குவாதம் போன்றவை நிகழ்ந்ததாகத் தெரிய வந்தால் அன்று இரவே அழைத்து அதை சமரசமாக முடித்து வைப்பார். எல்லோருடனும் தொடர்ந்து நட்பில் இருப்பார். மூன்று பேரையும் மிஸ் பண்ணுகிறோம். அவர்களது குடும்பத்துடன் நிச்சயம் நாங்கள் இருப்போம்” என்று உருக்கமாகப் பேசினார்.
நடிகர் சங்க துணைத்தலைவர் பூச்சி முருகன் பேசும்போது, ‘‘ நடிகர் விவேக் இறந்தபோது அவர் நினைவாக அவர் வசித்த தெருவிற்கு சின்னக் கலைவாணர் விவேக் தெரு என பெயர் வைக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். இரண்டே நாளில் அதற்கான உத்தரவைப் பிறப்பித்தார் தமிழக முதல்வர். அதேபோல `இயக்ர்குநர் சிகரம்’ பாலச்சந்தரின் பெயரும் ஒரு தெருவிற்கு வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதையும் முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்வோம்” என்றார்.
திரையுலகினர் பேசியதைத் தொடர்ந்து மறைந்த நடிகர்களுக்கு இரண்டு நிமிட மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது!