சென்னைக்கு அருகிலுள்ள புழல் பகுதியிலிருக்கும் காவாங்கரையைச் சேர்ந்தவர் நிர்மலா. இவருக்கு அந்தப் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று சொந்தமாக இருக்கிறது. அந்தக் குடியிருப்பிலுள்ள கழிவுநீர்த் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து, நிர்மலா அந்தப் பகுதியிலுள்ள ஒருவரிடம், அடைப்பை சரிசெய்ய ஆட்களை அழைத்துவரும்படி சொல்லியிருக்கிறார்.
அவரும் பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர், இஸ்மாயில் ஆகிய இரண்டு கூலித் தொழிலாளிகளைக் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்ய அழைத்து வந்திருக்கிறார். இன்று காலை பணிக்கு வந்த இருவரும் கழிவுநீர்த் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்கியிருக்கின்றனர். அப்போது தொட்டியிலிருந்து வந்த விஷவாயு தாக்கியதில், இருவரும் மயங்கி உள்ளே விழுந்திருக்கிறார்கள்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதி மக்கள் சம்பவம் குறித்து புழல் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், கழிவுநீர்த் தொட்டியிலிருந்து மயங்கிய நிலையிலிருந்த இருவரையும் சடலமாக மீட்டனர். இந்தச் சம்பவம் குறித்து புழல் பகுதி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், மீட்கப்பட்ட இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவுசெய்து போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பாக மீஞ்சூர் தனியார்ப் பள்ளியில் கழுவுநீர்த் தொட்டியில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த நிலையில், மீண்டும் ஒரு விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.