பெங்களூரு : கர்நாடகாவில், பெங்களூரில் உள்ள ஜெய நகர் தொகுதியில் ஓட்டு எண்ணிக்கையில் பல மணி நேரம் இழுபறி நீடித்த நிலையில், பா.ஜ., வேட்பாளர் சி.கே.ராமமூர்த்தி, 16 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஜெய நகர் தொகுதி ஓட்டு எண்ணிக்கை நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நீடித்தது.
இங்குள்ள எஸ்.எஸ்.எம்.ஆர்.வி., கல்லுாரியில் ஓட்டுகள் எண்ணப்பட்டன.
முதற்கட்ட ஓட்டு எண்ணிக்கையில் காங்., வேட்பாளர் சவுமியா ரெட்டி, 57 ஆயிரத்து 591 ஓட்டுகள் பெற்றதை அடுத்து, 294 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
குறைந்த அளவு வித்தியாசம் என்பதால், மீண்டும் ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும் என, அடுத்து வந்த பா.ஜ., வேட்பாளர் ராமமூர்த்தி வலியுறுத்தினார். இதைஅடுத்து ஓட்டுகள் மீண்டும் எண்ணப்பட்டன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்., கட்சியின் மாநில தலைவர் டி.கே. சிவகுமார் தலைமையில் அக்கட்சியினர் ஓட்டு எண்ணும் மையத்தின் முன் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், ஓட்டு எண்ணிக்கை பல மணி நேரம் நீடித்ததால் பதற்றம் நிலவியது. இறுதியில், பா.ஜ., வேட்பாளர் ராமமூர்த்தி, 16 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது.
இந்த முடிவை எதிர்த்து, வழக்கு தொடரப் போவதாக காங்., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement