விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வம்பாமேடு பகுதியை சேர்ந்த அமரன் என்பவர் விற்ற கள்ளச்சாராயத்தை குடித்ததால் தற்பொழுது வரை 11 பேர் உயிரிழந்த நிலையில் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் கள்ளச்சாராயம் அருந்திய சுமார் 60க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
அதே போன்று மரக்காணம் அருகே வம்பாமேடு பகுதிக்குச் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூற உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. நேற்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்திருந்தார் என்பதை குறிப்பிடத்தக்கது.