வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங்: சீனாவின் மக்கள் தொகை படிப்படியாக குறைந்து வரும் சூழலில், திருமணம் மற்றும் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, அங்குள்ள குடும்பக் கட்டுப்பாடு சங்கம், திருமணம் மற்றும் குழந்தைகள் பிறப்பை ஊக்கப்படுத்தும் விதமாக பல திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
முன்பெல்லாம் 10 குழந்தைகளை கூட பெற்றெடுத்து, வளர்ப்பதிலும் சளைக்காத தம்பதிகள், இப்போது ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுக்க தயங்குகின்றனர். இது இந்தியாவில் மட்டுமல்ல பல உலக நாடுகளிலும் இருந்து வருகிறது.
இதற்கு பொருளாதாரம், காலநிலை என பலதரப்பட்ட காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஆர்வமின்மை என்றே பலரும் கூறி வருகின்றனர். ஏற்கனவே உலக அளவில் மக்கள் தொகையில் முதலிடத்திலேயே இருந்த சீனாவை, இந்தியா முந்திவிட்டது.
கோவிட் பரவலில் லட்சக்கணக்கான உயிர்களை பலிகொடுத்த சீனாவின் மக்கள் தொகை, நாளுக்கு நாள் குறைந்து வருவது அந்நாட்டிற்கு வருத்தத்தை வரவழைத்துள்ளது. மீண்டும் மக்கள் தொகையை அதிகரிக்க பலதரப்பட்ட திட்டங்கள், அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், சமீபத்தில் கூட, கல்லூரி மாணவர்கள் காதலில் ஈடுபட, ஒரு வாரம் கல்லூரி விடுமுறையும் விடப்பட்ட நிகழ்வும் நடந்தேறியது. காதல், திருமணம் போன்றவற்றை ஊக்குவித்தால், குழந்தை பிறப்பு விகிதத்தையும் அதிகரிக்கலாம் என்பதால் இப்படியெல்லாம் யோசித்து செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், சீனாவின் குடும்பக் கட்டுப்பாடு சங்கம், பெண்களை திருமணம் செய்து கொள்ள ஊக்குவிக்கும் திட்டங்களைத் துவங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது, சீனாவின் 20 நகரங்களில் முதல்கட்டமாக திருமணம் செய்வதை ஊக்குவித்தல், தகுந்த வயதில் குழந்தைகளை பெறுதல், குழந்தை வளர்ப்புப் பொறுப்புகளை பகிர்ந்து கொள்ள பெற்றோரை ஊக்குவித்தல் மற்றும் வரதட்சணை போன்ற பழக்கவழக்கங்களை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை மையக்கருவாக கொண்டு பல முன்னெடுப்புகளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement