வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்டாக்ஹோம்: சுவீடனுக்கு சென்றுள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 8 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் இந்தோ பசிபிக், உக்ரைன் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி ஆலோசனை செய்தார். இந்த பயணம் குறித்து, சுவீடனில் உள்ள இந்திய சமூகத்துடன் தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி என ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நேற்று முன்தினம் சுவீடன் நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றார். இந்தப் பயணத்தில் ஐரோப்பிய யூனியனின் இந்தோ-பசிபிக் அமைச்சர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் அவர் பங்கேற்றார். இந்த கூட்டத்தின் பின்னணியில் பிரான்ஸ், ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, சைப்ரஸ், லட்வியா, லித்துவேனியா, ரோமேனியா ஆகிய நாடுகளின் அமைச்சர்களை ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
பயணம் குறித்து ஜெய்சங்கர் வெளியிட்ட அறிக்கை: பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் கேத்தரீன் கொலனாவுடன் பேசும்போது, பிரான்ஸ் தேசிய விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி தெரிவித்தேன். அதே போல் ஜி-20 உச்சி மாநாடு, இந்தோ பசிபிக் விவகாரம் குறித்து பேசினேன்.
சுவீடனின் பாதுகாப்பு அமைச்சர் பால் ஜான்சனை சந்தித்தது மகிழ்ச்சி. பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு பற்றிய பயனுள்ள கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். சுவீடனில் உள்ள இந்திய சமூகத்துடன் தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இருதரப்பு உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அவர்களிடம் எடுத்துரைத்தேன்.
சுவீடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராகவும், பலதரப்புகளையும் உள்ளடக்கிய கூட்டாளியாகவும் மதிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இந்தியாவில் நடைபெற்று வரும் மாற்றங்கள் குறித்தும் பேசினேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சுவீடன் பார்லிமென்ட் சபாநாயகர் ஆண்ட்ரியாஸை ஜெய்சங்கர் சந்தித்தார். நமது இரு பார்லிமென்ட் ஜனநாயக நாடுகளுக்கிடையேயான தொடர்புகள் குறித்த தகவல்களை இருவரும் பரிமாறிக் கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement