சால்ட் லேக் சிட்டி : அமெரிக்காவில், தன் கணவரை மெல்ல சாகும் விஷம் கொடுத்து கொலை செய்த பெண், அந்த மகிழ்ச்சியை தன் தோழிகளுக்கு மது விருந்து கொடுத்து கொண்டாடியுள்ளார்.
அமெரிக்காவின் யூடா மாகாணத்தில் உள்ள காமாஸ் நகரைச் சேர்ந்தவர் காவ்ரி டர்தேன் ரிச்சின்ஸ்.
திடுக்கிடும் தகவல்
இவரது கணவர் எரிக் ரிச்சின்ஸ். இந்த தம்பதிக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2022ல் எரிக், வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் ஓராண்டுக்கு பின், எரிக் மரணத்தில் திடுக்கிடும் உண்மை சமீபத்தில் வெளியாகி உள்ளது.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
கடந்த 2022 பிப்ரவரி 14ல் காதலர் தினத்தன்று, காவ்ரி தன் வீட்டில் வைத்து கணவர் எரிக்குக்கு மது கொடுத்துள்ளார்.
இதனால் எரிக் உடல்நலம் பாதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அந்த ஆண்டு மார்ச்சில் போலீசாருக்கு போன் செய்த காவ்ரி, தன் கணவர் மயக்கமடைந்ததாக தெரிவித்துள்ளார்.
போலீசார் வந்து பார்த்தபோது எரிக் இறந்து கிடந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், கணவன் எரிக்கை மனைவி காவ்ரி திட்டமிட்டு, மெல்ல சாகும் விஷத்தை மதுவில் கலந்து கொடுத்து கொலை செய்தது தெரியவந்துஉள்ளது.
வழக்கு பதிவு
கணவன் இறந்ததை அடுத்து காவ்ரி, தன் தோழிகளை அழைத்து மது விருந்து கொடுத்து மகிழ்ச்சியை கொண்டாடியதும் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதையடுத்து கணவனை கொலை செய்த காவ்ரி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
காவ்ரி, எதற்காக தன் கணவரை கொலை செய்தார் என தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு போலீசார் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்