சென்னை:
கோடை வெயில் தனது முழு உக்கிரத்தையும் காட்டி வரும் நிலையில், ஜில்லென மழை பெய்ய போகிறது என்பதுதான் தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் அப்டேட்.
வங்கக்கடலில் உருவான மோக்கா புயல் வங்கதேசத்தையும், மியான்மரையும் பந்தாடி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு பாதிப்புகளை அந்நாடுகளில் மோக்கா புயல் ஏற்படுத்தி உள்ளது. அங்கு மழை, வெள்ள பாதிப்புகளை ஏற்படுத்திய மோக்கா புயல், தென் மாநிலங்களில் வேறு மாதிரியான சம்பவங்களை செய்துவிட்டு சென்றிருக்கிறது.
அதாவது, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சூழ்ந்திருந்த மழை மேகங்களை போகிற போக்கில் இழுத்துக் கொண்டு சென்றுவிட்டது மோக்கா புயல். இதனால் கோடை வெயிலின் உக்கிரத்தை தென் மாநிலங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, தமிழ்நாடு வெயிலில் தகித்து வருகிறது. சென்னை, வேலூர், நாமக்கல், மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் சூரியன் அனலை கக்கி வருகிறது.
இன்று தமிழகத்தின் பல இடங்களில் வெயில் 104 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தியது. இன்னும் அடுத்தடுத்த நாட்களில் 106, 107 டிகிரி பாரன்ஹீட்டுக்கு வெப்பம் உயரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பகலில் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இப்படி வெயில் சுட்டெரிக்கும் நிலையில்தான், தமிழ்நாடு வெதர்மேன் மனதுக்கு இதம் அளிக்கும் செய்தியை சொல்லி இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெயில் அளவு இன்று 43 டிகிரி செல்சியஸையும் தாண்டியது. இந்நிலையில், கடல் காற்று ஊருக்குள் நுழைந்து பொத்தேரி, மறைமலைநகர், ஓரகடம் பகுதிகளை சுற்றி சிகப்பு தக்காளிகள் (மழை மேகங்கள்) சூழ்ந்திருக்கின்றன. ஆனால், சென்னை நகரில் மழை பெய்ய வாய்ப்பே இல்லை” என அதில் கூறப்பட்டுள்ளது.
இதனால் இன்று இரவு அல்லது நாளை காலையில் ஊரப்பாக்கம், ஆதனூர், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், ஓரகடம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஜில் மழையை எதிர்பார்க்கலாம்.