சென்னை:
அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயத்தால் யாருமே மரணம் அடையவில்லை என அதிமுக பொதுச்செயலாளர்
கூறினார். அப்போது அங்கிருந்த நிருபர் ஒருவர், எடப்பாடி பழனிசாமி கூறியது தவறு என்பதற்கான ஆதாரங்களை காட்டிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் பலியான சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே, கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.
“திமுக ஆட்சியில் பாலாறும், தேனாறும் ஓடுவதாக கூறினார். ஆனால் தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் தான் ஓடுகிறது. இப்போதுதான் காவல்துறை நடவடிக்கை எடுத்து மாநிலம் முழுவதும் பலரை கைது செய்து வருகிறது. இதை முன்கூட்டியே செய்திருந்தால் இத்தனை பேரின் உயிர் போயிருக்காது. கள்ளச்சாராயத்தை பற்றி பாடிய சமூக ஆர்வலர்கள் எல்லாம்ல இப்போது எங்கு போனார்கள்? நடிகர்கள் யாரும் இப்போது வாய் திறக்கவில்லையே.. 10 ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் கள்ளச்சாராய மரணம் என்பதே தமிழ்நாட்டில் இல்லாமல் இருந்தது. இத்தனை பேர் மரணத்துக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என அவர் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நிருபர் ஒருவர், அதிமுக ஆட்சிக்காலத்தில் கடந்த 2020-ம் ஆண்டு கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் பலியானதாக தேசியக் குற்ற ஆவணக்காப்பக (NCRB) அறிக்கை மற்றும் நாடாளுமன்ற கேள்வி – பதில் பதிவு ஆகியவற்றை சுட்டிக்காட்டினார். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதற்கு மழுப்பலாக பதிலளித்து அங்கிருந்து சென்றார்.