சென்னை: தமிழகத்தில் சாராய ஆறு ஓடிக் கொண்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கள்ளச் சாராயம் அருந்தி, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கள்ளச் சாராயம் குடித்தவர்களில் 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். கள்ளச் சாராயம் குடித்தவர்களில் சிலருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. பலர் அவரச சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். இது துரயமான, அதிர்ச்சியான, வேதனையான நிகழ்வு.
இந்த அரசு இரண்டு ஆண்டுகளில் எந்தத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை. கள்ளச் சாராயம் விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. திமுகவைச் சேர்ந்தவர்கள் கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் அரசியல் பின்புலம் உள்ளவர்கள் தொடர்ந்து கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வருகிறது. இதை கட்டுப்படுத்த தவறிய காரணத்தால்தான் இத்தனை உயிர்களை இழந்து உள்ளோம்.
கள்ளச் சாராயத்தை விற்பனை செய்தவர்கள் அரசியல் பின்புலம் கொண்டவர்கள். அதிமுக ஆட்சியில் இதைக் கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டது. ஆனால், இந்த 2 ஆண்டுகளில் கள்ளச் சாராய விற்பனை பெருகி உள்ளது. போலி மதுபானம் விற்பனை செய்பவர்கள் அதிகரித்து உள்ளனர். இன்று ஒரே நாளில் 2 ஆயிரம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், இது தொடர்பாக அரசுக்கு தெரிந்துள்ளது.
எனவே, கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும். ஆட்சி பொறுப்பு ஏற்றபோது தேனாறும் பாலாறும் ஓடும் என்றார்கள். இன்று சாராய ஆறுதான் ஓடிக் கொண்டுள்ளது” என்றார்.