மத்தியப் பிரதேசத்தின் சாகரில் உள்ள பிடிசி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குஷ்வாஹா சமாஜ் மாநாட்டில், ஒருவர் நோய்வாய்ப்பட்ட தன் ஒரு வயது மகனை முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் முன் வீசியதால் குழப்பம் ஏற்பட்டது. முகேஷ் படேல் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், சௌஹான் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது தன் மகனை நடைபாதையின் மீதிருந்து சுமார் 20 அடி உயரத்திற்கு வீசினார், இதனால் குழந்தை மேடைக்கு முன்னால் தரையில் விழுந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக குழந்தைக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. எனினும், சம்பவ இடத்தில் இருந்த தலைமைக் காவலர் உடனடியாக குழந்தையை எடுத்து தாயிடம் அழைத்துச் சென்றார். அடுத்த சில நொடிகளில் முதல்வர் உட்பட, அதிகாரிகள் பலரும் குழந்தையின் பெற்றோரை அணுகி விவரம் கேட்டுள்ளனர்.
குழந்தையின் இதயத்தில் இரண்டு துளைகள் உள்ளன, குழந்தைக்கான சிகிச்சை மற்றும் பொருளாதார தேவைகளின் உதவியை நாடியபோது அதிகாரிகள் தங்களை அலைக்கழித்ததால் விரக்தியடைந்த அவர், முதல்வரின் கவனத்தை ஈர்க்க, இவ்வாறு குழந்தையை வீசியுள்ளார். பின்னர் அங்கிருந்த அதிகாரிகளை அழைத்து குழந்தையின் மருத்துவ வரலாறு அனைத்தும் அறிந்து, அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவியை விரைந்து செய்துகொடுக்குமாறு முதல்வர் சௌஹான் உத்தரவிட்டார்.
சஜாபூர் மாவட்டத்தைச் சேர்த்ந்தவர் முகேஷ் படேல். இவர் உடல்நிலை சரியில்லாத தாய், மனைவி, ஐந்து வயது குழந்தை மற்றும் இதயத்தில் துளையுடன் இருக்கும் நரேஷ் என்ற குழந்தை ஆகியோருடன் வசித்து வருகிறார். கூலித் தொழிலாளியாக இருக்கும் இவர், தனக்கு வரும் குறைந்த வருமானத்தை வைத்தே குடும்பத்தை நடத்தி வருகிறார். உடல்நிலை பாதிக்கப்பட்ட தன் குழந்தையின் சிகிச்சைக்காக பல மருத்துவமனைகள் ஏறி இறங்கியுள்ளனர். ஆனால் எந்தப் பலனுமில்லை.
குழந்தைக்கான சிறப்பு சிகிச்சை மும்பையில்தான் கிடைக்கும். முதல்கட்டமாக அதற்கு 3 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் முகேஷின் மோசமான பொருளாதாரச் சூழ்நிலையால் இதை எதையும் செய்ய முடியாமல், அவர் விரக்தியில் இருந்துள்ளார்.
குழந்தைக்கு இதயம் தொடர்பாக சிகிச்சையளிப்பதாக தங்கள் பகுதியில் உள்ளவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். அதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை முகேஷும் அவரின் மனைவி மற்றும் குழந்தை மூவரும், தியோரியை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது எதேச்சையாக வழியில் முதல்வரின் மாநாடு நடப்பதைப் பார்த்துள்ளனர். அங்கு போய் எப்படியேனும் முதல்வரைச் சந்தித்துவிடலாம் என நினைத்துச் சென்றுள்ளனர். அப்போது முதல்வரின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே உடல்நிலை சரியில்லாத குழந்தையைத் தூக்கி வீசியுள்ளார் முகேஷ். முதல்வர் முன்பு தான் அப்படி நடந்துகொண்டதற்காக தன் ஆழ்ந்த வருத்தத்தை முகேஷ் தெரிவித்துள்ளார்.
“குழந்தையின் அனைத்து விவரங்களும் ஏற்கெனவே எங்களிடம் உள்ளன. வரும் ஜூன் 2-ம் தேதி அவர்கள் போபால் அனுப்பிவைக்கப்பட்டு அங்கு குழந்தைக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படும்” என சாஹர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.