மதுவிலக்கை அமல்படுத்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து போராட தயாராக இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து திருமாவளவன் ஆறுதல் கூறினார். அப்போது பேசிய அவர், மது விற்பனையை தமிழக அரசு கண்டும் காணாமல் இருப்பது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்றார்.
எனவே மதுவிலக்கை அமல்படுத்தி, கள்ளச்சாராய ஒழிப்புப் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மதுவிலக்குக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி போராடினால், அவருடன் இணைந்து போராட தயாராக இருப்பதாகவும் கூறினார்.
அண்மையில் கர்நாடகா வெற்றிக்கு காங்கிரசுக்கு வாழ்த்து தெரிவித்த திருமா, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுமாறு அதிமுகவுக்கு அறிவுரை கூறினார். ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்துகொண்டு அதிமுகவுக்கு அவர் அறிவுரை கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழகத்தில் அநீதி நடப்பதால் திருமாவளவன் தான் பாஜக உடன் இணைய வேண்டும் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனால் திருமாவளவன் விரைவில் அதிமுக கூட்டணிக்கு செல்வார் என பேச்சுகள் அடிபட்டு வந்தன. ஆனால், இதை திட்டவட்டமாக மறுத்த திருமாவளவன், திமுகவையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் பிரிக்க சதி நடந்து வருகின்றன.
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் எண்ணம் இல்லை என விளக்கம் அளித்தார். இந்நிலையில் தற்போது மதுவிலக்கை அமல்படுத்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து போராட தயார் என்று திருமா பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in