உசிலம்பட்டி | பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் கொய்யா மரங்களை அழிக்கும் விவசாயிகள்

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் கொய்யாவில் பூச்சி, புழு தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் கொய்யா மரங்களை அழித்துவிட்டு மாற்று விவசாயம் செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

உசிலம்பட்டி அருகே உள்ள வகுரணி கிராமத்தைச் சேர்ந்தவர் அரசு (61). இவர் நெல், காய்கறி, பூ, மரப்பயிர்கள் விவசாயம் செய்து வருகிறார். இவர் தற்போது கொய்யாவில் நல்ல விளைச்சல் இருந்தும் பூச்சி, புழு தாக்குதலால் நல்ல விலைக்கு விற்க முடியவில்லை. இதனால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய முடியாமல் வேறு வழியின்றி கொய்யா மரங்களை அழித்துவிட்டு மாற்று விவசாயம் செய்யவும், மரப்பயிர்கள் நடவும் முடிவெடுத்துள்ளார்.

இதுகுறித்து விவசாயி அரசு கூறியதாவது: சுமார் 4 ஆண்டுக்கு முன்பு தைவான் பிங்க் என்ற ரக கொய்யா மரக்கன்றுகளை 3 ஏக்கரில் நட்டேன். ஏக்கருக்கு அடர் நடவு மூலம் ஏக்கருக்கு ஆயிரம் கன்றுகள் வீதம் 3 ஆயிரம் கன்றுகள் நட்டேன். ஒரு மரக்கன்று ரூ.70க்கு வாங்கினேன். முதல் ஆண்டில் நல்ல வருவாய் கிடைத்தது. ஒரு கிலோ ரூ.30க்கு வியாபாரிகளிடம் விற்றேன். அடுத்தடுத்த ஆண்டுகளில் பூச்சி, புழு தாக்குதல் அதிகரித்துள்ளது. தைவான் பிங்க் ரக கொய்யாவின் தோல்கள் மிகவும் மிருதுவாக இருப்பதால் பூச்சி, புழுத் தாக்குதல் அதிகரித்துள்ளன.

சிறு காயாக இருக்கும்போது பூச்சி, ஈக்கள் வந்து முட்டையிட்டு செல்கின்றன. காய் திரட்சியாக மினுமினுப்புடன் திரட்சியாக வருகிறது. காய் பழமாகும் தருணத்தில் புழுக்கள் அதிகரித்து அழுகிவிடுகின்றன.

இதனை மொத்தமாக கொள்முதல் செய்ய வியாபாரிகள் தயங்குகின்றனர். மேலும் ஒரு கிலோ ரூ.10க்கும் குறைவாக கேட்பதால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கொய்யாவை அழித்துவிட்டு மாற்று விவசாயம் செய்ய முடிவெடுத்துள்ளேன். இதேபோல், உசிலம்பட்டி அருகே உள்ள மலப்பட்டியில் விவசாயி ஒருவர் பூச்சி, புழு தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் 1000 மரங்களை அழித்துள்ளார்.

சீமானூத்து பகுதி விவசாயி 3 ஆயிரம் மரக்கன்றுகளை அழித்துள்ளார். நானும் 3 ஆயிரம் மரக்கன்றுகளை சில வாரங்களில் அழித்துவிட்டு மாற்று விவசாயம் அல்லது சந்தனமரம் போன்ற மரப்பயிர்களை நடவுள்ளேன். ஆனால் மகாராஷ்டிராவில் இதேபோன்று நோய்த் தாக்குதல் உள்ள கொய்யாவுக்கு நைலான் காகித போர்த்தி தொழில்நுட்பம் மூலம் பாதுகாத்து பலன் பெறுகின்றனர்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.