புதுடெல்லி: உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தலில் பாஜகவிற்கு முஸ்லிம்களால் பலன் கிடைத்துள்ளதாக கருதப்படுகிறது. இவர்கள் தங்கள் வாக்குகளை குறிப்பிட்ட கட்சிக்கு என்றில்லாமல் வேட்பாளர்களை பார்த்து வாக்களித்திருப்பதாகத் தெரிகிறது.
உ.பி. உள்ளாட்சி தேர்தல் அதன் சட்டப்பேரவை தேர்தலுக்கான அரையிறுதிப் போட்டியாகக் கருதப்படுகிறது. இதில் பெறும் வெற்றியின் பலன் பலசமயம் அங்கு நடைபெறும் மக்களவை தேர்தலிலும் கிடைப்பதுண்டு. இதனால் உ.பி.யில் உள்ள கட்சிகள் உள்ளாட்சி தேர்தலை சவாலாக ஏற்று கவனம் செலுத்தி வருகின்றன. இந்தமுறை நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் முஸ்லிம்கள் அனைத்து கட்சிகளின் கவனம் பெற்றனர். குறிப்பாக, முஸ்லிம்களை இதுவரை கண்டுகொள்ளாத பாஜக இம்முறை முஸ்லிம்கள் பலருக்கு போட்டியிட வாய்ப்பளித்தது.
கடந்தமுறை வெறும் 57 முஸ்லிம்கள் போட்டியிட வாய்ப்பளித்த பாஜக இந்தமுறை 395 பேருக்கு வாய்ப்பளித்தது. இவர்களில், சுமார் 60 பேர் வெற்றி பெற்றுள்ளனர். முனிசிபல் மற்றும் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு பாஜக சார்பில் போட்டியிட்ட 32 முஸ்லிம்களில் 5 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இது தமக்கு கிடைத்த முஸ்லிம் ஆதரவாக பாஜக கருதுகிறது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் உ.பி. பாஜக சிறுபான்மையினர் பிரிவு தலைவரான குன்வர் பாசித் அலி கூறும்போது, “கடந்த தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் 40.73 ஆக இருந்தது. இது தற்போது 47.54 சதவீதமாக அதிகரித்தமைக்கு முஸ்லிம் வாக்குகள்தான் காரணம். இவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் அதிகமுள்ள பகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். இது, உ.பி.யில் சுமார் 24 சதவீதம் உள்ள முஸ்லிம்கள் பாஜக பக்கம் சாயத் தொடங்கி இருப்பதை காட்டுகிறது” என்று தெரிவித்தார்.
உ.பி.யில் 5 முறை முதல்வராக இருந்த மாயாவதியின் பகுஜன் சமாஜ், இதர கட்சிகளை விட முஸ்லிம்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது. தனது தலித் வாக்குகளுடன் முஸ்லிம் வாக்குகள் சேர்ந்தால் அதிக பலன் கிடைக்கும் என மாயாவதி எதிர்பார்த்தார். ஆனால், இவருக்கு கடந்த தேர்தலில் அலிகர், மீரட் மாநகரங்களில் கிடைத்த 2 மேயர் பதவிகளும் கைவிட்டுப் போய் பூஜ்ஜியமே மிஞ்சியது.
உ.பி.யில் மொத்தம் உள்ள 17 மாநகர மேயர் பதவிகளில் 11 முஸ்லிம்களுக்கு மாயாவதி போட்டியிட வாப்பளித்தார். இவருக்கு அடுத்து முஸ்லிம்களுக்கு அதிக வாய்ப்பளித்த காங்கிரஸுக்கும் பலன் கிடைத்துள்ளது. இக்கட்சி வேட்பாளர்களாக முஸ்லிம்கள் போட்டியிட்ட இடங்களில் அக்கட்சிக்கு இரண்டாவது அல்லது மூன்றாவது இடம் கடந்த தேர்தலை விட அதிகமாகக் கிடைத்துள்ளது.
வழக்கமாக முஸ்லிம்களுக்கு அதிக வாய்ப்பை அளிக்கும் சமாஜ்வாதி இந்த தேர்தலில் குறைத்தது. இதனால், அக்கட்சிக்கு பாஜகவை விட குறைந்த எண்ணிக்கை முஸ்லிம் வெற்றியாளர்கள் கிடைத்துள்ளனர். ஹைதராபாத் எம்.பி. அசதுத்தீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி சார்பில் 35 முஸ்லிம்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
எனினும், இந்தமுறை முஸ்லிம்கள் குறிப்பிட்ட கட்சிக்கு என வாக்களிக்காமல், தமக்கு பிடித்தமான வேட்பாளருக்கே வாக்கு அளித்திருப்பதாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாகவே பாஜகவிலும் முஸ்லிம் வெற்றியாளர்கள் அதிகரித்துள்ளதாக ஒரு கருத்து எழுந்துள்ளது.
முஸ்லிம்களை இதுவரை கண்டுகொள்ளாத பாஜக இம்முறை முஸ்லிம்கள் பலருக்கு போட்டியிட வாய்ப்பளித்தது.