விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கள்ளச்சாராயம் அருந்தி உடல்நிலை பாதிக்கப்பட்ட நபர்களை முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான
இன்று காலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது நிவாரணப் பொருட்களையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்தவித திட்டத்தையும் கொண்டு வரவில்லை. கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கள்ளச்சாராய விற்பனை
இதற்கு காரணம், திமுகவை சேர்ந்தவர்களே கள்ளச்சாராய விற்பனையிலும், போலி மதுபான விற்பனையிலும் ஈடுபட்டு வருவது தான். குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் அரசியல் பின்புலம் உள்ள ஒருவர், தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இவற்றை எல்லாம் கட்டுப்படுத்த தவறியதால் தான் 18 உயிர்களை நாம் இழந்துள்ளோம். போலி மதுபான விற்பனை செய்தவர் திமுகவின் சித்தாமூர் ஒன்றிய கவுன்சிலர் நாகப்பன் சகோதரர் அமாவாசை எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
திமுக அரசு மீது குற்றச்சாட்டு
அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் இப்படிப்பட்ட முறைகேடுகளில் ஈடுபடுவது தெரிய வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 1,600க்கும் மேற்பட்டோரை கைது செய்து ஏராளமான கள்ளச்சாராய பாக்கெட்களை பறிமுதல் செய்துள்ளனர். அப்படியெனில் கள்ளச்சாராயம் விற்பனை குறித்து அரசுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது. இதற்கெல்லாம் முதல்வர்
பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
செந்தில் பாலாஜி தான் பொறுப்பு
ஆட்சிக்கு வந்ததும் தேன் ஆறும், பால் ஆறும் ஓடும் என்று கூறினார்கள். ஆனால் சாராய ஆறு தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கள்ளச்சாராய நடவடிக்கையை கட்டுப்படுத்தவில்லை. மது குடிப்பவர்களை ஊக்குவிக்கும் வேலையில் அரசே செய்து கொண்டிருக்கிறது. ஒரு மது பாட்டிலுக்கு 10 சதவீதம் கமிஷன் வாங்குவதாக ஊடகங்களில் செய்தி வருகின்றன. ஏனெனில் மேலிடம் வரை கமிஷன் தர வேண்டுமாம்.
பிடிஆர் சொன்ன புகார்
இப்படி ஊழல் செய்து தான் 30 ஆயிரம் கோடியை சம்பாதித்துள்ளனர். இதை சாதாரண ஆள் சொல்லவில்லை. பொருளாதார மேதை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். எங்கள் ஆட்சியில் மதுவிற்கு எதிராக பொங்கி எழுந்த சமூகப் போராளிகள் எங்கே சென்றார்கள்? எல்லாரும் திமுக கைக்கூலிகள். திரைத் துறையினரும் குரல் கொடுக்கவில்லை. திமுக கூட்டணி கட்சிகள் கூட குரல் கொடுக்கவில்லை.
உச்ச நீதிமன்ற உத்தரவு
மேலும் செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கில் உச்ச நீதிமன்ற மிக முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது. சிறப்பு விசாரணைக்கு குழு அமைத்து முதலில் இருந்து விசாரணையை தொடர வேண்டும். தேவைப்பட்டால் நீதிமன்றத்தை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதையும் ஊடக நண்பர்கள் கவனிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.