காமெடி நடிகராகப் பல திரைப்படங்களில் நடித்திருப்பவர் நடிகர் போண்டா மணி. இவர் சமீபத்தில் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் அதற்காகச் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவருடைய மகள் சாய் குமாரி சமீபத்தில் வெளியான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 400 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார். திரைப்படத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் போண்டா மணி மகளின் கல்விச் செலவை மொத்தமாக ஏற்றுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக போண்டா மணியைத் தொடர்பு கொண்டு பேசினோம்.
“என் பொண்ணு எடுத்த மார்க்கிற்கு நாங்க அட்மிஷன் பீஸ் எல்லாமே கட்ட வேண்டியிருந்திருக்கும். நான் உடம்பு முடியாம மருத்துவமனையில் இருந்தப்ப ஐசரி கணேஷ் சார் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். அப்ப உங்க பொண்ணு எவ்வளவு மார்க் எடுத்தாலும் அவங்க படிப்பு முடிச்சுட்டு வேலைக்குப் போய் சம்பாதிக்கும் வரை அவங்களுடைய படிப்புக்கு நான் பொறுப்புன்னு சொன்னார். நான் அத பெரிசா நினைக்கல. ரிசல்ட் வந்ததும் அவரே ஃபோன் பண்ணி வரச் சொல்லி பாப்பாவுக்கு அட்மிஷன் போட்டுக் கொடுத்தார்.
ஐயப்பந்தாங்கலில் நாங்க இப்ப இருக்கிறதனால அந்த ஏரியாவிலேயே படிக்கணும்னா அங்க ஏதாவது ஒரு கல்லூரியில் அட்மிஷன் வாங்கித் தரேன்னு சொன்னார். நான் உங்க காலேஜ்லதான் என் பொண்ணு படிக்கணும்னு சொன்னதும் அப்ப பல்லாவரத்திலேயே நண்பரை வீடு பார்க்கச் சொல்றேன், நீங்க மாறி வந்துடுங்கன்னு சொன்னார். இப்ப பல்லாவரத்தில் வீடு பார்க்கத் தொடங்கியிருக்கோம். அவரை நேரில் இதுவரைக்கும் சந்திக்கல. நீங்க என்னைத் தேடி வர வேண்டாம்… உடம்பு முடியாத சமயத்துல அலைய வேண்டாம்னு சொன்னார். அவர் ரொம்ப நல்ல மனுஷன். என் ஆப்ரேஷனுக்கும் அவரால முடிஞ்ச உதவியை செய்றேன்னு சொல்லியிருக்கார்!” என்றார்.
அவருடைய மகள் சாய் குமாரி பேசும்போது, “நான் பிளஸ் ஒன், பிளஸ் டூவில் காமர்ஸ் குரூப் எடுத்துப் படிச்சேன். அதுல 600க்கு 400 மதிப்பெண்கள் வாங்கிருக்கேன். இப்ப பிசிஏ பாடப்பிரிவை தேர்வு செய்திருக்கேன். கம்ப்யூட்டர் துறை சார்ந்த வேலைக்குப் போகணும்னு எனக்கு ஆசை!” என்றார்.