கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த உரிகம் வனச்சரக பகுதிகளில், புள்ளி மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட காட்டுயிர்கள் வேட்டையாடப்படுவதாக, வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. ஓசூர் வனக்கோட்ட வனஉயிரின காப்பாளர் கார்த்திகேயனி அறிவுரையின் கீழ், உரிகம் வனச்சரக அலுவலர் வெங்கடாசலம் தலைமையிலான, அதிகாரிகள் வேட்டைத்தடுப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, காவேரி தெற்கு வனஉயிரின சரணாயலத்துக்கு உட்பட்ட, பிலிக்கல் காப்புக்காடு பகுதியில், கள்ள நாட்டுத்துப்பாக்கி வைத்து புள்ளிமான் வேட்டையாடப்பட்டதாக, ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்த பரமசிவன் (45) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அவர் புள்ளிமானை வேட்டையாடியது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவரை கைது செய்து, கள்ள நாட்டுத்துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் புள்ளி மானை பறிமுதல் செய்தனர். அவர் யாரிடமிருந்து துப்பாக்கி வாங்கினார், கள்ள நாட்டுத்துப்பாக்கிகளை யார் தயாரித்து விற்பனை செய்கின்றனர் என, விசாரித்து வருகின்றனர். மேலும், காவேரி தெற்கு வனஉயிரின சரணாலயம் முழுவதிலும், வேட்டைத்தடுப்பு கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் களமிறங்கியுள்ளனர்.