கர்நாடக முதல்வர் ரேஸ்… சித்தராமையா முந்துவது எப்படி?!

கர்நாடகாவில் முதல்வர் பதவிக்கான ரேஸில் முன்னாள் முதல்வர் சிததராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. கட்சியின் அகில இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டெல்லி சென்றிருக்கிறார் சித்தராமையா.

சித்தராமையா

முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு டி.கே.சிவக்குமாரை துணை முதல்வராக ஆக்கலாம் என்று கட்சித் தலைமை யோசிப்பதாகவும், துணை முதல்வராவதற்கு டி.கே.சிவக்குமாருக்கு விருப்பமில்லை என்றும் செய்திகள் கூறுகின்றன. இந்த நிலையில், முதல்வர் பதவிக்கான போட்டியில் சித்தராமையா முந்துவதாக செய்திகள் வருகின்றன.

தங்களுக்கு 109 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாக சித்தராமையாவின் ஆதரவாளர்களும், தங்களுக்கு 75-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாக டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்களும் கூறிவருகிறார்கள். ஆனால், 135 எம்.எல்.ஏ-க்களில் பெரும்பான்மையோரின் ஆதரவு சித்தராமையாவுக்கு இருப்பதாகவும், அவரே முதல்வர் பதவிக்கு தேர்வுசெய்யப்படுவார் என்றும் காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 80-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் சித்தராமையாவுக்கும், சுமார் 45 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுதான் டி.கே.சிவக்குமாருக்கு இருக்கிறது என்றும் அந்த வட்டாரங்கள் கூறியிருக்கின்றன.

டி.கே.சிவக்குமார்

கர்நாடகா மாநில அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவரான சித்தராமையா, மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக விளங்குகிறார். 2013 முதல் 2018 வரை கர்நாடகா முதல்வராக இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் அவர் மேற்கொண்ட செயல்பாடுகள், சிறந்த நிர்வாகி என்கிற பிம்பத்தை அவருக்கு ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடகாவில் பெரும்பாலான சமூகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராகவும் சித்தராமையா விளங்குகிறார். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை. இந்த அம்சங்கள் தற்போது அவருக்கு மிகப்பெரிய பலமாக இருக்கின்றன.

டி.கே.சிவக்குமாரைப் பொறுத்தவரையில், 2020-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டது முதல், ‘பவர்ஃபுல்’ தலைவராக வலம்வருகிறார். தற்போது காங்கிரஸ் பெற்றிருக்கும் தேர்தல் வெற்றியில், டி.கே.சிவக்குமாருக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. கட்சிக்காக சிறை சென்றவர் என்கிற பெயரும் இவருக்கு உண்டு. ஆனால், சித்தராமையாவுடன் ஒப்பிடும்போது, பழைய மைசூர் பகுதியைத் தவிர கர்நாடகாவின் மற்ற பகுதிகளில் எல்லோராலும் ஏற்கக்கூடியவராகவோ, செல்வாக்கு மிகுந்தவராகவோ இவர் இல்லை என்கிறார்கள்.

சித்தராமையா

முக்கியமாக, பண மோசடி வழக்குகள் உட்பட சுமார் 30 வழக்குகள் டி.கே.சிவக்குமார் மீது இருக்கின்றன. அந்த வழக்குகளில்தான் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரை முதல்வர் பதவியில் உட்கார வைத்தால், எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. அப்படியொன்று நிகழ்ந்தால், இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருந்தும், பல புதிய சவால்களை காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

டி.கே.சிவக்குமாருக்கு எதிரான வழக்குகளைக் கையாண்டவர் கர்நாடகா டி.ஜி.பி-யாக இருந்த பிரவீன் சூட். கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிபெற்ற நிலையில், சி.பி.ஐ இயக்குநராக பிரவீன் சூட் நியமிக்கப்பட்டிருக்கிறார். டி.கே.சிவக்குமாருக்கும் காங்கிரஸுக்கும் செக் வைப்பதற்காகவே, இவர் சி.பி.ஐ இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்கிற ஒரு தகவலும் கர்நாடகாக அரசியல் வட்டாரத்தில் உலாவுகிறது.

கர்நாடகாவில் ஆட்சியை அமைத்து, 2024-ல் நாடாளுமன்றத் தேர்தல்வரை எந்தவித பிரச்னையும் இல்லாமல் ஆட்சியைக் கொண்டுசெல்ல வேண்டிய அவசியம் காங்கிரஸுக்கு இருக்கிறது. மேலும், முக்கியமான ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். சித்தராமையாவை முதல்வராக்கினால் மட்டுமே இவையெல்லாம் சாத்தியமாகும் என்று கட்சித் தலைமை கருதுகிறது என்ற தகவலும் காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

டி.கே.சிவக்குமார்

மேலும், சித்தராமையா, மதச்சார்பற்ற ஜனதா தளத்திலிருந்து வந்தவர். தமக்கு முதல்வர் பதவி தரப்படவில்லை என்ற காரணத்தால், அந்தக் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். இதுதான் என்னுடைய தேர்தல் அரசியலில் கடைசித் தேர்தல் என்று அவர் தேர்தலுக்கு முன்பாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், டி.கே.சிவக்குமாருக்கு முதல்வர் பதவி அளிக்கப்பட்டால், காங்கிரஸிலிருந்து சித்தராமையா வெளியே செல்லவும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் கர்நாடகா அரசியலை உற்றுநோக்கும் அரசியல் பார்வையாளர்கள். எனவே, சித்தராமையாவுக்கே முதல்வர் பதவி கைவசமாகும் வாய்ப்பு இருக்கிறது. சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் டி.கே.சிவக்குமாருக்கு முக்கியப் பொறுப்பு தரப்படும் என்பததான் தற்போதைய செய்தி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.