சென்னை: கள்ளச்சாராயம் விற்றவருக்கும் தமிழக அரசு ரூ.50 ஆயிரம் இழப்பீடு அறிவித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கடற்கரையோர மீனவ கிராமமான எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி இரவு 50-க்கும் மேற்பட்டோர் விஷசாராயம் வாங்கி குடித்துள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் சிலருக்கு வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மற்றும் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனளிக்காமல் 14 பேர் உயிரிழந்துள்ளனர். விஷசாராயம் குடித்ததில் எக்கியார் குப்பத்தில் 14 பேரும் சித்தமூரில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
விஷசாராயம் அருந்தியதில் 22 பேர் பலியாகி இருப்பது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனிடையே, விஷ சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தை தமிழக அரசு அறிவித்தது. அதேபோல, பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவி தொகையை தமிழக அரசு அறிவித்தது.
இந்த நிலையில், கள்ளச்சாராயம் விற்றவருக்கும் தமிழக அரசு இழப்பீடு அறிவித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- செங்கல்பட்டில் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்பிற்குக் காரணமானவர் என்று அமாவாசை என்பவர் மீது காவல்துறை வழக்குத் தொடுத்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள அமாவாசை சித்தாமூர் திமுக ஒன்றிய துணைச் செயலாளரின் சகோதரர் ஆவார். கைதிலிருந்து தப்பிப்பதற்காக தானும் கள்ளச்சாராயம் உட்கொண்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நாடகமாடியுள்ளார் அமாவாசை. அவருக்கும் 50,000 ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது இந்த திறனற்ற திமுக அரசு” என்று தெரிவித்துள்ளார்.