பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 185 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், 10 பேர் வெற்றிப் பெற்றுள்ளனர்.
கர்நாடகாவில் நடைபெற்ற 16-வது சட்டப்பேரவைத் தேர்தலில் 224 தொகுதிகளில் 2 ஆயிரத்து 613 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ், பாஜக, மஜத, சுயேச்சை ஆகியவற்றை சேர்த்து மொத்தமாக 185 பெண்கள் களத்தில் இருந்தனர்.
ரூபா கலா 2-வது முறையாக…: இதில் காங்கிரஸ் சார்பில் பெலகாவி ஊரகத் தொகுதியில் போட்டியிட்ட லட்சுமி ஹெம்பல்கர், கோலார் தங்கவயலில் போட்டியிட்ட ரூபா கலா, குல்பர்காவில் போட்டியிட்ட கனீஸ் பாத்திமா, மூடுகெரேவில் போட்டியிட்ட நாயனா மோட்டம்மா ஆகிய 4 பேரும் வெற்றி பெற்றனர். தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கோலார் தங்கவயலில் ரூபா கலா எம்எல்ஏவாக 2வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
முதல் தலித் பெண் எம்எல்ஏ: இதேபோல பாஜக சார்பில் மகாதேவபுராவில் போட்டியிட்ட மஞ்சுளா, சுள்ளியாவில் போட்டியிட்ட பாகிரதி முரல்யா, நிப்பானியில் போட்டியிட்ட ஜொள்ளே சசிகலா ஆகிய மூவரும் வெற்றி பெற்றனர்.
இதில் பாகிரதி முரல்யா கடலோர கர்நாடகாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு கர்நாடக சட்டப்பேரவைக்குள் நுழையும் முதல் தலித் பெண் எம்எல்ஏ என்ற பெருமையை பெற்றுள்ளார்.
மஜத சார்பில் ஷிமோகா ஊரக தொகுதியில் போட்டியிட்ட சாரதா பூர்யநாயக், தியோதர்கில் போட்டியிட்ட கரீமா ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர். ஹரப்பனஹள்ளி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் மஜத துணை முதல்வர் எம்.பி.பிரகாஷின் மகள் லதா 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் முன்னாள் முதல்வர் சித்தராமையாவை சந்தித்து காங்கிரஸூக்கு ஆதரவு தெரிவித்தார்.
1962-ல் அதிகம்: கர்நாடகாவில் பெண் எம்எல்ஏக்கள் காங்கிரஸ் 4, பாஜக 3, மஜத 2, சுயேச்சை 1 மொத்தமாக 10 பேர் தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளனர். கடந்த 2018 தேர்தலிலும் 10 பெண் எம்எல்ஏக்களே வெற்றி பெற்றனர். கடந்த 1962-ம் ஆண்டு அதிகபட்சமாக 18 பெண் எம்எல்ஏக்கள் தேர்வாகி கர்நாடக சட்டப்பேரவைக்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.