மதுரை: பாஜகவின் பிரிவினைவாத அரசியலை மக்கள் வெறுத்துவிட்டார்கள் என்பதற்கு கர்நாடக தேர்தல் முடிவுகளே சான்று’என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.. அத்துடன், கள்ளச்சாராயம் விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில், ”சுற்றி வளைக்குது பாசிசப்படை, வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு” என்ற தலைப்பில் மதுரையில் மாநாடு நடந்தது.. இந்த மாநாட்டில் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, “ஆர்எஸ்எஸ் – பாஜக கூட்டு களவாணிகளின் ஆட்சிதான் இந்தியாவை பாழ்படுத்தி கொண்டிருக்கிறது. அவர்களுடைய சுரண்டல் வெறும் பொருளியல் சுரண்டல் மட்டும் கிடையாது.. சாதி, மதத்தின் பெயரால் பிரிவினைவாதத்தின் சுரண்டலாகவும் வலுப்பெற்று வருகிறது.
இந்தியாவில் பாசிசத்துக்கு கூடுதல் பண்பு உள்ளது.. சனாதன பாசிசம் நம் நாட்டில் உள்ளது.. சாதியின், மதத்தின் பெயரால் மக்களை பாகுபாடு செய்கிற பண்பு, இங்கு மட்டுமே காணப்படுகிறது.. சனாதனத்தின் பண்பு பிறப்பின் அடிப்படையில் உழைக்கும் மக்களை துண்டு துண்டாக பிளவுபடுத்துகிற ஆபத்தான பண்புகளை கொண்டுள்ளது.
வரையறை சனாதனம்: இந்தியாவில் எந்த சமூக பெண்களாக இருந்தாலும்சரி, அவர்கள் ஆண்களுக்கு கீழானவர்கள் என்று வரையறை செய்கிறது சனாதனம்… பெண் சமூகம் 100 சதவீதம் சூத்திரர்கள் என்ற வரையறை செய்துள்ளது சனாதனம். இப்படிப்பட்ட இன பாகுபாடு உலகில் வேறு எந்த தேசத்திலும் கிடையாது. ஆர்எஸ்எஸ் இயக்கம் 60 வயதில் பிரசவித்த பிள்ளைதான் பாஜக. பாஜகவை, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போல சராசரி அரசியல் கட்சியாக பார்க்கக்கூடாது.
மதம் சார்ந்த நம்பிக்கைகளை துருப்பு சீட்டாக வைத்துள்ள அவர்கள், இந்துத்துவாவை எதிர்த்தால் இந்துக்களை எதிர்ப்பதாக திசை திருப்புகிறார்கள். இந்துத்துவா என்பதன் பின்னால், ஆர்எஸ்எஸ், பாஜக ஒளிந்து கொள்கிறது. தமிழகத்தில் தலித் ஒற்றுமையை சிதைத்து விட்டது சனாதனம். தீவிர இடதுசாரி அரசியல் பேசியவர்கள் எல்லாம் இப்போது வலதுசாரி அரசியல் பேச ஆரம்பித்துவிட்டார்கள்..
கருத்தியல் : இன்று கர்நாடகாவில் காங்கிரஸை வெற்றி பெற வைத்தவர்கள் 40 சதவீதம் இந்துக்கள்தான். பாஜக பேசிய மதப்பிரிவினை அரசியலை அந்த மக்கள் வெறுத்துள்ளார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.. ஹிஜாப் போன்ற பிரச்சினைகளை முன் வைத்த பாஜகவை மக்கள் இன்று தூக்கி எறிந்துவிட்டார்கள்.. நமக்கிடையே எவ்வளவு முரண்கள் இருந்தாலும் அகில இந்திய அளவில் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்… கருத்தியல் முரண்கள் இருந்தாலும், பாஜக-வுக்கு எதிரான இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்” என்றார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு திருமாவளவன் பேட்டி தந்தார்.. அப்போது, கள்ளச்சாராயம் காரணமாக உயிரிழந்த மரக்காணம் சம்பவம் குறித்து கேட்கப்பட்டது..
கள்ளச்சாராயம்: அதற்கு திருமாவளவன், “திமுகவின் தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.. ஆகவே, அரசு மதுக்கடைகளை சட்டப்பூர்வமாக மதுக்கடைகளை இயங்க அனுமதித்த நிலையிலும்கூட, கள்ளச்சாராய புழக்கத்தை கட்டப்படுத்த முடியவில்லை.. கள்ளச்சாராயத்தக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள், தமிழகம் தழுவிய அளவில் அவர்கள் யார் யார் என்று அடையாளம் கண்டு, களையெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என்றார்.
இதையடுத்து, கள்ளச்சாராயம் விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டிருக்கிறதே.. இவ்வாறு அறிவித்திருப்பது, கள்ளச்சாராயத்தை ஊக்குவிப்பதுபோல் அமைந்துவிடாதா? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.. அதற்கு திருமாவளவன், “நீங்கள் சொல்லும் வாதத்தை ஒருவகையில் நான் ஏற்கிறேன்.. மறுக்க விரும்பவில்லை.. ஆனாலும், உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிற குடும்பம் நடுத்தெருவில் நிற்கும்.. அந்த குடும்பத்தை கருத்தில் கொண்டு, அந்த இழப்பீடு வழங்குவது ஏற்புடையதுதான்” என்றார்.
அறிவிப்பு: ஏற்கனவே இந்த அறிவிப்பினை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும்நிலையில், திருமாவளவனின் இந்த பதில் கவனம் பெற்று வருகிறது..,சாலை விபத்துகளில் இறப்பவர்களுக்கு தலா 2 லட்சம் கொடுக்கும் அரசு, கள்ளச்சாராயம் குடித்து இறந்த 10 லட்சமா? இது பயமா? பதற்றமா? என்றெல்லாம் இணையவாசிகள் கேள்வி எழுப்பி கொண்டிருக்கிறார்கள்.