
நியூ மெக்சிகோ நகரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 காவலர்கள் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்குப் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது.

நியூசிலாந்தின் வெலிங்டன் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு பேர் உயிரிழந்திருக்கின்றனர். மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை உயரலாம் என மக்கள் அச்சம்.

பாகிஸ்தானில், தொலைதூர வடமேற்கில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் உரிமை தொடர்பாக இரண்டு பழங்குடியினக் குழுக்களுக்கிடையில் எழுந்த மோதலில், 15 பேர் கொல்லப்பட்டனர்.

இம்ரான்கான் பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராஜா ரியாஸ் அகமதுகான் தெரிவித்திருக்கிறார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கியதற்காக, நீதிமன்றத்தையும் விமர்சித்திருக்கிறார்.

கென்யாவில் கடும் வறட்சி நிலவுவதால் வளர்ப்பு விலங்குகளை, சிங்கங்கள் வேட்டையாடுகின்றன. இதனால், அந்த நாட்டின் மிகவும் வயதான சிங்கம் உட்பட 10 சிங்கங்களை மக்கள் கொலைசெய்தனர்.

புளோரிடா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜோசப் டிடூரி (Joseph Dituri) நீருக்கடியில் அதிக காலம் வாழ்ந்த உலக சாதனையை முறியடித்திருக்கிறார். இவர் 74 நாள்களாக ஜூல்ஸின் அண்டர்சீ லாட்ஜில் நீருக்கடியில் வசித்து வருகிறார். மேலும் அதை 100 நாள்களாக மாற்றத் திட்டமிட்டிருக்கிறார்.

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பள்ளி ஆசிரியை ஒருவர், தன்னுடைய மாணவர்களுக்கு வகுப்பில் தன்பாலின ஈர்ப்பாளரின் கதாபாத்திரம் கொண்ட டிஸ்னி திரைப்படத்தைத் திரையிட்டதால், அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பிரபல பாடகரான தி வீக்கெண்ட் (The Weeknd) தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தன் இயற்பெயரை Abel Tesfaye என மாற்றியிருக்கிறார்.

பிரேசிலில், கால்பந்து ஜாம்பவானான பீலேவின் தங்க முலாம் பூசப்பட்ட கல்லறை, பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டது.

தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் மியான்மரை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருக்கிறது வியட்நாமின் பெண்கள் கால்பந்து அணி.