விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ள சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மரக்காணத்தைச் சேர்ந்த அமரனை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அமரனிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையின் அடிப்படையில் கள்ளச்சாராய வியாபாரி முத்துவை போலீசார் தேடி வந்தனர்.
இதற்காக சிறப்பு தனி படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் முத்துவை தேடி வந்த நிலையில் தனிப்படை போலீசார் முத்துவை இன்று காலை 10 மணி அளவில் திண்டிவனம் மேம்பாலம் அருகே டிஎஸ்பி சுனில் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
பிறகு முத்துவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திண்டிவனம் திமுக 20வது வார்டு திமுக கவுன்சிலர் ரம்யாவின் கணவர் மருவூர் ராஜா என்பவரிடமிருந்து சாராயம் வாங்கியதை வாக்குமூலமாக அளித்துள்ளார். மருவூர் ராஜா என்பவர் திமுக அமைச்சர் மஸ்தான் உடன் நெருக்கமாக இருப்பதால் காவல்துறையினர் இதற்கு முன்பு பலமுறை அவரை கைது செய்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு திண்டிவனத்தில் மருதூர் ராஜா பயணம் செய்த காரை சோதனை செய்ததில் மூன்று கேன்களில் இருந்த கள்ளச்சாராயம் பிடிபட்டது. மேலும் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சாராயம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் பாக்கெட் செய்ய தேவையான உபகரணங்களை போலீசார் கைப்பற்றியதோடு மருவூர் ராஜாவை கைது செய்து திண்டிவனம் கிளை சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே அதிமுகவை சேர்ந்த சிவி சண்முகம் நேற்று முன்தினம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது விழுப்புரம் மாவட்டத்திற்கு முழுவதும் திமுக கவுன்சிலரின் கணவர் மருவூர் ராஜா கள்ள சாராயத்தை விநியோகம் செய்கிறார். அவருக்குத் துணையாக திமுகவைச் சேர்ந்த இரு அமைச்சர்கள் இருக்கின்றனர்.
காவல்துறையினருக்கு தெரிந்தே மருவர் ராஜா கள்ள சாராயத்தை விழுப்புரம் மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்கிறார் என பகிரங்கமாக குற்றம் சாட்டு இருந்தார். இந்த நிலையில் திமுக அமைச்சர்கள் மீது பல்வேறு விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்த நிலையில் தற்பொழுது சிறையில் இருக்கும் மருவூர் ராஜா குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி வழங்கியுள்ளார். விழுப்புரத்தையே கலக்கிய பிரபல சாராய வியாபாரியும் திமுக கவுன்சிலரின் கணவருமான மருவூர் ராஜா குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.