உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம் நாளை (மே 17ம் தேதி ) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மத்திய அரசு, சஞ்சார் சாதி என்ற பெயரில் புதிய பிரத்யேக இணையதளத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த இணையதளம் வாயிலாக, மக்கள் தொலைந்த அல்லது திருட்டு போன மொபைல் போன் குறித்த விவரங்களை அளித்து, அதனை கண்டறிய உதவி பெற முடியும். மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், www.sancharsaathi.gov.in என்ற புதிய இணையதள சேவையை துவங்கி வைக்க உள்ளார்.
இந்த இணையதளம் மூலம் நாடு முழுவதும் தொலைந்த அல்லது திருட்டு போன மொபைல் போன்கள், அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களுடனும் இணைக்கப்பட உள்ளது. தற்போதைக்கு, டில்லி மற்றும் மும்பை தொலைத்தொடர்பு வட்டங்களுடன் மட்டும் இணைக்கப்பட்டுள்ளது.தற்போது வரை இந்த இணையதளம் வாயிலாக, 4 லட்சத்தி 70 ஆயிரம் தொலைந்த அல்லது திருடப்பட்ட மொபைல் போன்கள் முடக்கப்பட்டுள்ளது.
மேலும், 2 லட்சத்து 40 ஆயிரம் மொபைல் போன்கள் டிராக் செய்யப்பட்டு வருகிறது. சுமார் 8 ஆயிரம் மொபைல் போன்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த போர்ட்டலின் உதவியுடன், பயனர்கள் தங்களுடைய பெயரில் வழங்கப்பட்டுள்ள சிம் கார்டு எண் விவரங்களை பெற முடியும்.
உங்களது பெயரில் வேறு யாராவது சிம் பெற்று பயன்படுத்தினால், அதனை முடக்க முடியும். பயனர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மொபைல் போன் செல்லுப்படியாகும் காலம், தேவையற்ற போன் அழைப்புகளை தவிர்ப்பது எப்படி, சைபர் கிரைம் தொடர்பாக புகார் அளிப்பது உள்ளிட்டவை பல பயனுள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளது.