தோல்வியிலும் தயாரிப்பாளரை மட்டும் பாராட்டிய நாகார்ஜுனா மகன்
நாகார்ஜுனா, அமலா நட்சத்திரத் தம்பதியினரின் மகன் அகில். தெலுங்கில் எட்டு வருடங்களுக்கு முன்பே கதாநாயகனாக அறிமுகமானவர். கடந்த எட்டு வருடங்களில் 5 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். ஆனாலும், சாதனைக்குரிய வெற்றியைப் பெற்று இன்னும் முன்னணி கதாநாயகர்களின் வரிசையில் இடம் பிடிக்கத் தடுமாறி வருகிறார்.
அவர் நடித்து இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த 'ஏஜன்ட்' என்ற படம் படுதோல்வியைச் சந்தித்தது. படம் வெளியான சில நாட்களிலேயே படத்தின் தயாரிப்பாளரான அனில் சுங்காரா படத்தின் தோல்விக்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். முழுமையான ஸ்கிரிப்ட் இல்லாமல் படப்பிடிப்புக்குச் சென்றோம், மொத்த பழியையும் தானே ஏற்கிறேன் என்றார்.
இந்நிலையில் அகில் நேற்று 'ஏஜன்ட்' படத்தின் தோல்வி குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்தோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்தபடி படம் திரையில் வரவில்லை. உங்களுக்கு நல்ல படத்தைக் கொடுக்கத் தவறிவிட்டோம். படத்தின் தயாரிப்பாளர் அனில் அவர்களுக்கு சிறப்பு நன்றி, அவர்தான் எனக்குப் பெரும் ஆதரவு. மீண்டும் வலிமையுடன் திரும்பி வருவேன்,” என்று தயாரிப்பாளருக்கு மட்டும் நன்றி தெரிவித்துள்ளார்.
படத்தை இயக்கிய சுரேந்தர் ரெட்டியை அவர் முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டார். ஏற்கெனவே, படத்தின் தயாரிப்பளார் அறிக்கை விட்ட போதும் அதில் இயக்குனர் பெயர் இல்லை. எனவே, தயாரிப்பாளரும், நாயகனும் படத்தின் தோல்விக்கு இயக்குனர்தான் காரணம் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.
முழுமையான ஸ்கிரிப்ட் இல்லாமல் தயாரிப்பாளரும், நாயகன் அகிலும் எப்படி படப்பிடிப்பை ஆரம்பிக்க சம்மதித்தார்கள் என்றும் கேள்வி எழுகிறது. சுரேந்தர் ரெட்டி தெலுங்கில் கடைசியாக இயக்கிய ''துருவா (தனி ஒருவன் ரீமேக்), சைரா நரசிம்ம ரெட்டி” ஆகிய படங்களும் தோல்விப் படங்கள்தான்.