நாமக்கல் பெண் கொலை; குற்றவாளிகள் யார்? என்னதான் நடக்குது? – ஓபிஎஸ் கிடுக்கிப்பிடி கேள்வி

நாமக்கல் அருகே பட்டதாரி பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை வழங்க வேண்டும் என்று

வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; கடந்த மார்ச் மாதம் 11-ஆம் தேதி நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்த ஜேடர்பாளையத்தைச் சேர்ந்த நித்யா ஆடு மேயக்க சென்றபோது பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

இதனையடுத்து, அப்பகுதியில் ஒரு கரும்பு ஆலையில் பணிபுரிந்த வட மாநில சிறுவனை ஜேடர்பாளையம் காவல் துறையினர் கைது செய்து விசாரித்ததாகவும், இந்தச் சிறுவன் அளித்த தகவலின் அடிப்படையில் மூன்று வட மாநிலத் தொழிலாளர்கள் விசாரிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் மீது எவ்விதமான வழக்கும் பதியப்படவில்லை என்றும், இதனைத் தொடர்ந்து ஜேடர்பாளையம் அருகே சரளைமேட்டில் உள்ள வெல்ல ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கியுள்ள குடிசைக்கு மார்ச் மாதம் 16-ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும், மார்ச் 21-ஆம் தேதியன்று சரளைமேட்டில் உள்ள வெல்ல ஆலையில் பத்துக்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளர்களின் குடிசைகளுக்கு

தீ வைக்கப்பட்டதாகவும், ஆலை உரிமையாளர் வீடு மர்மமான முறையில் தீப்பிடித்து, பணம், ஆவணங்கள், தங்க நகைகள் ஆகியவை தீக்கிரையானதாகவும், உயிரிழந்தவரின் உறவினர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாகவும், சன் ஸ்டார் மேல்நிலைப் பள்ளியின் வாகனம் தீக்கிரையாக்கப்பட்டதாகவும், டிராக்டர்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தன.

இந்தச் சூழ்நிலையில், நான்கு நாட்களுக்கு முன்பு சரளைமேட்டில் உள்ள வெல்ல ஆலையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் நான்கு பேர் ஒரு தற்காலிக அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, சில மர்ம நபர்கள் அந்த அறைக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகவும், இதில் அங்கு உறங்கிக் கொண்டிருந்த நான்கு பேரும் படுகாயமடைந்து கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மூவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. படுகாயமடைந்த அனைவரும் பூரண குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டுமென்ற எனது விருப்பத்தினை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருமதி நித்யா கொலைக்குப் பிறகு, அந்தப் பகுதியில் ஆங்காங்கே வன்முறை நடந்து வருகிறது. எப்போது எங்கு பெட்ரோல் வெடிகுண்டு வீசப்படுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உறைந்து போயுள்ளனர். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், அப்பகுதியில் வெடிகுண்டு கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது. அப்பகுதி மக்கள் நிம்மதியை இழந்து தவிக்கின்றனர். இந்தக் கொலையில் உண்மையான குற்றவாளிகளை காவல் துறையினர் கைது செய்யவில்லை என்றும், இந்தக் கொலையில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கருதுகிறார்கள். இது அப்பகுதியில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் சூழ்நிலையை உருவாக்கும். உண்மையானக் குற்றவாளியைக் கண்டுபிடிப்பதில் மெத்தனப் போக்கை கடைபிடிக்கும் தி.மு.க. அரசிற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வழக்கு குறித்து விசாரிக்க 18 கண்காணிப்பு குழுக்களை அமைத்தும், இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி. பிரிவிற்கு மாற்றியும் அரசு உத்தரவிட்டு இருந்தாலும், இது அந்தப் பகுதியில் அமைதியை ஏற்படுத்துமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இது மிகவும் காலதாமதமான நடவடிக்கை. இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற திருமதி நித்யா கொலையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது? யார், யார் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்? கொலைக்கான பின்னணி என்ன? உண்மையான கொலைக் குற்றவாளிகள் யார்? குற்றவாளியை கண்டுபிடிப்பதில் ஏன் தாமதம்? இந்தக் கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளியை மறைக்க அரசியல் ரீதியாக அழுத்தம் தரப்படுகிறதா? என்பது குறித்து அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது.

எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, இந்தக் கொலை வழக்கு குறித்து விரிவான அறிக்கை அளிப்பதோடு, உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதில் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.