பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? கல்வித்துறை அறிவிப்பு.!
தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் மே 19-ம் தேதி வெளியாகிறது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2022-2023-ம் கல்வியாண்டிற்கான பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதியன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் முதல் தளத்தில் வெளியிடப்பட உள்ளது.
இதில், பத்தாம் வகுப்பிற்கு காலை 10 மணிக்கும், பதினொன்றாம் வகுப்பிற்கு பிற்பகல் 2 மணிக்கும் தேர்வு முடிவு வெளியிடப்படும். இந்தத் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலும் பார்க்கலாம்.
இதேபோன்று அனைத்து மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள், ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் உள்ளிட்ட இடங்களில் மாணவர்கள் கட்டணம் இல்லாமல் தேர்வு முடிவினைப் பார்க்கலாம்.
மேலும், மாணவர்கள் பள்ளியில் வழங்கிய கைபேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் ”என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.