புதுடெல்லி: தடை செய்யப்பட்ட முஸ்லிம் அமைப்பான பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியாவுடன் (பிஎப்ஐ) பஜ்ரங் தளம் அமைப்பை இணைத்து பேசியது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ரூ.100 கோடி அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்ட நீதிமன்றத்தில் பஜ்ரங் தளம் ஹிந்துஸ்தான் அமைப்பின் தலைவர் ஹிதேஷ் பரத்வாஜ் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில், “சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்காக காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், சிமி, அல்-காய்தா போன்ற தேச விரோத அமைப்புகளுடன் பஜ்ரங் தளத்தை காங்கிரஸ் ஒப்பிட்டுள்ளது.
பெரும்பான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் இடையே விரோதம் மற்றும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பஜ்ரங் தளம் அமைப்பை தடை செய்வோம் என உறுதி அளித்துள்ளது” என்று கூறியுள்ளார்.
இந்த மனுவின் அடிப்படையில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சங்ரூர் மாவட்ட நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
முன்னதாக, கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “சட்டமும் அரசியலமைப்பும் புனிதமானவை. பெரும்பான்மை மற்றும் சிறுபான்மையினர் இடையே விரோதம் அல்லது வெறுப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் பஜ்ரங் தளம், பிஎஃப்ஐ போன்ற அமைப்புகளால் அவற்றை மீற முடியாது என நாங்கள் நம்புகிறோம். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்த அமைப்புகள் மீது தடை விதிப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறப்பட்டிருந்தது.
எனினும் இந்த வாக்குறுதிக்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி பின்வாங்கியது. இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கூறும்போது, “வெறுப்பு அரசியலை நிறுத்துவதே எங்கள் நோக்கம், பஜ்ரங் தளம் அமைப்பை தடை செய்யும் திட்டம் இல்லை” என்றார்.