மும்பை: மகாராஷ்டிராவில் 7 கி.மீ. தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு நடந்துசென்ற கர்ப்பிணி வெப்ப அலையால் மயக்கமடைந்து உயிரிழந்தார்.
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் பழங்குடி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அவர்கள் வசிக்கும் கிராமங்களில் சாலை, போக்குவரத்து, மருத்துவ வசதி இல்லை.
இதன் காரணமாக பால்கர் மாவட்டத்தில் கர்ப்பிணிகள் உயிரிழப்பு தொடர்கதையாக நீடித்து வருகிறது. இந்த வரிசையில் மீண்டும் ஒரு கர்ப்பிணி உயிரிழந்திருக்கிறார்.
பால்கர் மாவட்டம், ஓசார் வீரா கிராமத்தை சேர்ந்தவர் சோனாலி வாகத் (21). இவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். சுமார் 3.5 கி.மீ. தொலைவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். வரும் 27-ம் தேதி அவருக்கு குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கிறது என்று ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் கடந்த 12-ம் தேதி அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. சாலை, வாகன வசதி இல்லாததால் 3.5 கி.மீ. தொலைவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுட்டெரிக்கும் வெயிலில் சோனாலி வாகத் நடந்து சென்றார்.
அங்கு பணியில் இருந்த மருத்துவர் சோனாலியை பரிசோதித்தார். இப்போது ஏற்பட்டிருப்பது பிரசவ வலி இல்லை, சாதாரண வலி என்று மருத்துவர் கூறினார். அதோடு மருந்து, மாத்திரைகளையும் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து மீண்டும் 3.5 கி.மீ. தொலைவு நடந்து வீட்டுக்கு சோனாலி திரும்பி சென்றார். கடுமையான வெப்ப அலையில் சுமார் 7 கி.மீ. தொலைவுக்கு அவர் நடந்து சென்றதால் வீட்டுக்கு வந்ததும் மயங்கி விழுந்தார். சிறிது நேரத்துக்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த கருவும் உயிரிழந்தது.
இதுகுறித்து உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் பிரகாஷ் நிகம் கூறும்போது, “சோனாலிக்கு ரத்த சோகை பிரச்சினை இருந்தது. கடந்த 12-ம் தேதி அவருக்கு திடீரென வலி ஏற்பட்டதால் உள்ளூர் சுகாதார ஊழியர், அவரை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார். அங்கிருந்த மருத்துவர், சோனாலியை பரிசோதித்து மருந்து, மாத்திரைகளை வழங்கியுள்ளார்.
ஆனால் வெயிலில் நீண்ட தொலைவு நடந்து சென்றதால் அவர் உயிரிழந்திருக்கிறார். பால்கர் மாவட்டத்தில் பழங்குடி மக்கள் வசிக்கும் கிராமங்களில் சாலை, போக்குவரத்து, மருத்துவ வசதியை ஏற்படுத்தினால் மட்டுமே உயிரிழப்புகளை தடுக்க முடியும்’’ என்று தெரிவித்தார்.