சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி விஷசாராய வழக்குகள் குற்றப்புலனாய்வுத் துறைக்கு (CBCID) மாற்றம் செய்து தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் கடந்த சனிக்கிழமை விஷ சாராயம் குடித்த 40க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விஷசாராயம் குடித்ததில் எக்கியார் குப்பத்தில் 14 பேரும் சித்தமூரில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. விஷசாராயம் அருந்தியதில் 22 பேர் பலியாகி இருப்பது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனிடையே நேற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்து இருந்தார்.
அதேபோல், இது தொடர்பான வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படும் எனவும் அறிவித்து இருந்தார். அதன்படி, இந்த வழக்குகள் இன்று சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்கியார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விஷச்சாராயம் அருந்தி (13.05.2023 முதல் 15.05.2023 வரை) 13 நபர்கள் இறந்துபோன சம்பவம் தொடர்பாக மரக்காணம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அதோடு, செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருவேறு சம்பவங்களில் பெருக்கரணை கிராமத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் மற்றும் பேரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த இரண்டு நபர்கள் விஷச்சாராயம் அருந்தி 13.05.2023 அன்று இறந்துபோன சம்பவம் தொடர்பாக சித்தாமூர் காவல் நிலையத்தில் வழக்கு புலன் விசாரணையில் உள்ளன.
வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,15.05.2023 அன்று விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த வழக்குகள் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்ற செய்யப்படும் என அறிவித்தார்கள். முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவுப்படி இவ்வழக்கை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு (CBCID) மாற்றம் செய்து தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.