வடக்கு ரயில் பாதை அபிவிருத்திப் பணிகளை இந்த ஆண்டுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பு – அமைச்சர் பந்துல குணவர்தன

வடக்கு ரயில் பாதை அபிவிருத்திப் பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக போக்குவரத்து, நெடுங்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (16) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும், அடுத்த வருடம் முதல் காங்கசந்துறையில் இருந்து கொழும்பு வரை சிறந்த புகையிரத சேவையொன்றை வழங்குவதற்கு எதிர்பார்ப்பத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், பயணிகளுக்கு அசௌகரியங்களுக்கு உள்ளாகும் வகையில் மேற்கொள்ளப்படுகின் ரயில் வேலை நிறுத்தங்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கலாநிதி பந்துல தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…

குறுகிய நோக்கத்துடன் புகையிரத திணைக்களத்தின் வளங்களை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறானவர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ரயில்வே பிரதிப் பொது முகாமையாளர் (வணிகம்) பதவிக்கு மேற்கொள்ளப்பட்ட நியமனத்திற்கு, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பல ரயில்கள் இரத்துச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், அரசியல் தலையீடு காரணமாக இந்த நியமனங்கள் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

அரச திணைக்களத்தினால், அரசியல் தேவைகளுக்கு ஏற்ப அந்த நியமனங்களை மேற்கொள்ள முடியாது. அந்த நியமனங்கள் அனைத்தும் அரச சேவை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படுகின்றன. அரச சேவை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் நியமனங்களை அமைச்சரினால் மாற்ற முடியாது. இந்தக் காரணங்களால், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவையை உரிய முறையில் வழங்காவிட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வேயை தனியார் மயமாக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் பொதுவான கருத்து. ஆனால் தனிப்பட்ட முறையில் நான் அதற்கு விருப்பம் இல்லை. ரயில்வே திணைக்களத்தை ஒரு ஆணைக்குழுவாக மாற்றி, அந் நிறுவனத்தை மேம்படுத்த பல மாற்று முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.