நடிகர் ஷாருக்கான் மனைவி கெளரி கான் எழுதிய மை லைஃப் இன் டிசைன் என்ற காஃபி டேபிள் புத்தக வெளியிட்டு நிகழ்ச்சி நேற்று இரவு மும்பை ஹோட்டலில் நடந்தது.
இப்புத்தகத்தை வெளியிட்ட பிறகு பேசிய ஷாருக் கான் தனது மன்னத் வீட்டை வாங்கியபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். நாங்கள் எங்களுக்காக வீடு வாங்கியபோது அது மிகவும் இடிந்த நிலையில் இருந்தது. அதனை புதுப்பித்துக் கட்டவேண்டும். அதற்கு எங்களிடம் போதிய பணம் இல்லாமல் இருந்தது. வீட்டை புதிதாக வடிவமைத்துக் கட்ட டிசைனர் ஒருவரை வரவழைத்துப் பேசினோம். அவர் எப்படி வீட்டை வடிவமைத்துக் கட்டப்போகிறேன் என்று சொன்னார். அதற்கு அவர் சொன்ன தொகை மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால் எங்களிடம் அதிக அளவில் பணமில்லை.
எனவே கெளரியிடம், “ `நீ ஏன் நமது வீட்டை டிசைன் பண்ணக்கூடாது’ என்று கேட்டேன். அன்றுதான் கெளரி டிசைன் தொழிலுக்கு வந்தார். நான் சம்பாதித்து சம்பாதித்து எனது வீட்டிற்குத் தேவையான பொருட்களை வருடக்கணக்கில் வாங்கினேன். இப்போது எங்கள் வீட்டில் அனைத்தையும் கெளரிதான் டிசைன் செய்வார். இளைஞர்கள் எப்போதும் தங்களது கனவை கைவிடாதீர்கள். கடந்த 23 ஆண்டுகளாக நானும், கெளரியும் மும்பையில் மிகவும் பிஸியாக இருந்துவிட்டோம். கெளரி தன்னிடம் இருக்கும் திறமையை வெளிப்படுத்தவேண்டும் என்று ஒரு போதும் நினைத்ததில்லை.
இளைஞர்கள் உட்பட அனைவரும் தாங்கள் தவறவிட்ட கனவை எந்த வயதிலும் தொடங்கலாம்” என்றார். கெளரி கானின் காஃபி டேபிள் புத்தகத்தில் அவரின் டிசைனர் வாழ்க்கை, ஷாருக் கானின் பிரத்யேக புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கிறது. ஷாருக் கானின் பங்களாவின் உட்பகுதியையும் முழுமையாக பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். 1991ம் ஆண்டு ஷாருக் கான் கெளரியைத் திருமணம் செய்து கொண்டார். கெளரி கான் இப்போது பாலிவுட்டில் முக்கிய பிரமுகர்களுக்கு இன்டீரியர் டிசைனராக இருந்து வருகிறார்.