லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தன்னை தேசதுரோக வழக்கில் ராணுவம் 10 ஆண்டுகள் சிறையில் வைத்திருக்க திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் தலைவருமான இம்ரான் கான் கடந்த வாரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது கட்சியினர் வன்முறையில் இறங்கினர். இந்த வன்முறை, லாகூரில் ராணுவ அதிகாரியின் வீடு கொளுத்தப்பட்டது தொடர்பாக இம்ரான் கான் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளில் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் 2 வாரங்களுக்கு ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் ஊழல் வழக்கில் இம்ரான் கான் மனைவி புஷ்ரா பீபிக்கு லாகூர் நீதிமன்றம் மே 23-ம் தேதி வரை நேற்று ஜாமீன் வழங்கியது.
முன்னதாக நேற்று காலையில் தனது கட்சி நிர்வாகிகளை லாகூரில் உள்ள தனது இல்லத்தில் இம்ரான் கான் சந்தித்தார்.
இதையடுத்து ட்விட்டரில் இம்ரான் கான் வெளியிட்ட பதிவுகளில் அவர் கூறியிருப்பதாவது:
நான் சிறையில் இருந்தபோது வன்முறை சாக்குப்போக்கைப் பயன்படுத்தி, நீதிபதி, நடுவர் மற்றும் மரண தண்டனை அளிப்பவருக்கான பாத்திரத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். எனது மனைவியை சிறையில் அடைத்து என்னை அவமானப்படுத்துவதும், தேசதுரோக வழக்கில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு என்னை சிறையில் வைத்திருப்பதும் அவர்களின் நோக்கம்.
மக்கள் எதிர்வினையாற்றுவதை தடுக்க அவர்கள் 2 விஷயங்களை செய்துள்ளனர். முதலில் பிடிஐ தொண்டர்கள் மட்டுமின்றி சாமானிய மக்கள் மீதும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இரண்டாவதாக ஊடகங்களை தங்கள் முழுக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
எனது கடைசித் துளி ரத்தம் வரை உண்மையான சுதந்திரத்திற்காக நான் போராடுவேன். ஏனென்றால் இந்த வஞ்சகர்களுக்கு அடிமையாக இருப்பதை விட மரணத்தையே நான் விரும்புகிறேன். இவ்வாறு இம்ரான் கான் கூறியுள்ளார்.
இதனிடையே இஸ்லாமாபாத் உச்ச நீதிமன்றம் எதிரில் ஆளும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இம்ரான் கானுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் செயல்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.