25 வருடங்களைக் கடந்த அஜித் நடித்த 'அவள் வருவாளா'

தமிழ் சினிமாவில் சில படங்கள் ரசிக்கும்படியான படங்களாக இருந்தாலும் அதிகம் கண்டுகொள்ளப்படாமல் போன படங்களாக இருக்கும். அப்படி ஒரு படமாக அமைந்த படம்தான் அஜித் நடித்து 25 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'அவள் வருவாளா'. அக்காலத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற 'காதல் கோட்டை, காதல் மன்னன்' படங்களுக்குப் பிறகு வெளிவந்த படம் இது. படம் வெற்றி பெற்றாலும் 'காதல் கோட்டை, வாலி, அமர்க்களம், முகவரி' படங்கள் அளவிற்கு முக்கியத்துவம் பெறவில்லை. ரீமேக் படமாக அமைந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.

தெலுங்கில் 1997ல் வெளிவந்த 'பெல்லி' படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் எஸ்ஏ ராஜ்கமார் இசையமைப்பில் வட்டே நவீன், மகேஸ்வரி, பிருத்விராஜ் மற்றும் பலர் நடித்த படம். அப்படத்தை தமிழில் ராஜ்கபூர் இயக்க எஸ்ஏ ராஜ்குமார் இசையமைக்க அஜித், சிம்ரன், பிருத்விராஜ், சுஜாதா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா மற்றும் பலர் நடித்திருந்தார்கள். இப்படம் 1998ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி வெளிவந்தது. நேற்றுடன் இப்படம் வெளிவந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

ஏற்கெனவே திருமணமாகி கணவனை விட்டுப் பிரிந்தவர் சிம்ரன். அது தெரியாமல் அவரைப் பார்த்ததும் காதல் கொள்கிறார் அஜித். சில பல முயற்சிகளுக்குப் பின் சிம்ரனும் அஜித்தைக் காதலிக்க, இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது. அப்போது சிம்ரனின் முன்னாள் கணவரான பிருத்விராஜ் வருகிறார். சிம்ரனை பிளாக்மெயில் செய்கிறார். இல்லையென்றால் தங்களது முந்தைய திருமண வாழ்க்கையைப் பற்றி அஜித்திடம் சொல்லிவடுவதாக மிரட்டுகிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

துடிப்பான, காதல் மன்னாக இந்தப் படத்தில் அஜித் நடித்திருப்பார். சிம்ரன் டாப் ஹீரோயினாக இருந்த கால கட்டம் அது. அவர்களது ஜோடி பொருத்தமாக இருந்தது. கவுண்டமணி, செந்தில், கோவை சரளா நகைச்சுவையும், வெண்ணிற ஆடை மூர்த்தியின் கொஞ்சம் டபுள் மீனிங் நகைச்சுவையும் படத்தில் உண்டு. சுஜாதாவின் சென்டிமென்ட் நடிப்பு பெண்களை உருக வைத்தது.

எஸ்ஏ ராஜ்குமார் இசையில், “சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க” பாடல்கள் அப்போதைய சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்று. அடிக்கடி டிவி சேனல்களில் ஒளிபரப்பாகிக் கொண்டே இருந்த பாடல்.

படம் 25 வருடங்களை நிறைவு செய்தது குறித்து, “25 ஆண்டுகளுக்குப் பிறகு பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற மேஜிக்கை மீண்டும் பார்க்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார் சிம்ரன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.