Bad Touch அப்டினா என்ன? உடைந்த சீக்ரெட்… சிக்கிய அரசு பள்ளி ஆசிரியர்கள்… எல்லாம் அந்த ட்ரெய்னிங் தான் காரணம்!

வளர்ந்து வரும் இளம் தலைமுறையினருக்கு தங்களை பாதுகாத்து கொள்ள உரிய வழிகாட்டுதல்களை அளிக்க வேண்டிய பொறுப்பானது பெற்றோர், ஆசிரியர், சமூகம், அரசு எனப் பலருக்கும் இருக்கிறது. குறிப்பாக Good Touch, Bad Touch எனச் சொல்லப்படும் சரியான தொடுதல், தவறான தொடுதல் குறித்து பள்ளி பருவத்திலேயே மாணவ, மாணவிகளுக்கு சொல்லி தர வேண்டும். ஏனெனில் இள வயதில் மாணவர்களுக்கு பாலியல் சீண்டல்கள் அதிகம் நடக்கின்றன.

தவறான தொடுதல் எது

பலருக்கு அதுபற்றி தெரிவதில்லை. சிலர் மிரட்டப்பட்டு அச்சத்தில் மூடி மறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இவை அனைத்தும் மன ரீதியாக மாணவ, மாணவிகளை பெரிதும் பாதிக்கின்றன. இதுதொடர்பான விழிப்புணர்வு எவ்வளவு அவசியம் என்பதை ஆந்திர மாநிலத்தில் நடந்த சம்பவம் ஒன்று வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

ஆந்திராவில் நடந்த சம்பவம்

அல்லுரி சீதாராம ராஜூ மாவட்டத்தில் அரசு நடத்தி வரும் பழங்குடியின மாணவர்கள் படிக்கும் பள்ளி ஒன்றில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு பயிற்சி அளிக்க சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், Good Touch, Bad Touch குறித்து கற்று தரப்பட்டது. இதை கற்றுக் கொண்ட மாணவ, மாணவிகளுக்கு ஒரு விஷயம் தெரியவந்தது. இத்தனை நாட்களாக தங்களிடம் ஆசிரியர்கள் சிலர் நடந்து கொண்ட விதம் Bad Touch எனப் புரிந்து கொண்டனர்.

மாணவிகள் சொன்ன உண்மை

இந்த பயிற்சியின் போதே மாணவர்களிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. Bad Touch சூழலை எப்போதாவது அனுபவித்து இருக்கிறீர்களா? எனத் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் ஒருவித பதற்றத்தில் எதுவுமே வாய் திறக்கவில்லை. அதன்பிறகு உங்கள் அனுபவத்தை எழுத்துப்பூர்வமாக எங்களிடம் தெரிவிக்கலாம் எனக் கூறினர். அதில் உங்கள் பெயரை எழுத வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

5 ஆசிரியர்கள் சிக்கினர்

மாணவர்கள் அளித்த எழுத்துப்பூர்வ தகவல்களை படித்து பார்த்தால் 9 மற்றும் 10ஆம் வகுப்பு படிக்கும் 5 மாணவிகள் தங்களுக்கு 5 ஆசிரியர்கள் தவறான தொடுதலில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தனர். இதுபற்றி உடனடியாக பள்ளிக் கல்வித்துறை ஆணையருக்கு தொண்டு நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் மாவட்ட கல்வி அதிகாரி சலீம் பாஷா மூலம் விசாரிக்க உத்தரவிட்டனர்.

கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை

இதன்பேரில் உள்ளூர் மண்டல கல்வி அதிகாரிகள், பெண் குழந்தைகள் மேம்பாட்டு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரித்தனர். அதில் ஆசிரியர்கள் தவறாக நடந்து கொண்டது தெரியவர உடனே அந்த 5 பேரையும் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஒரு விழிப்புணர்வு பயிற்சி எந்த அளவிற்கு உதவிகரமாக இருந்தது என்பது இதன்மூலம் தெரிய வருகிறது. நாமும் சிறுவர், சிறுமிகளுக்கு Good Touch, Bad Touch குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். ஆக்கப்பூர்வமான சமூகத்தை உருவாக்குவோம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.