கொழும்பு, இலங்கையில் உள்ள கொழும்பு பல்கலைக்கழகத்தில், அரசுக்கு எதிராக மாணவர்கள் அணி திரண்டு மீண்டும் போராட்டத்தை துவங்க இருப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவித்ததை அடுத்து, ஆயுதப்படையினர் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டனர்.
இறுதியில் அது தவறான தகவல் என தெரியவந்ததும் படையினர் திரும்ப பெறப்பட்டனர்.
நம் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து, அரசுக்கு எதிராக மக்கள் கடந்த ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிபர் மாளிகை உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து சூறையாடினர். இது அந்நாட்டு அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய கரும்புள்ளியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கொழும்பு பல்கலையில் உள்ள உணவகத்தில், வழக்கத்துக்கு மாறாக, 1,500 பேருக்கு மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
அரசுக்கு எதிராக மாணவர்கள் மீண்டும் கிளர்ந்து எழுந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் உளவுத்துறை தகவல் தெரிவித்தது. இதை தொடர்ந்து பல்கலையை சுற்றி ஆயிரக்கணக்கான ஆயுதப்படை வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
ஆனால், பல்கலையின் கலைத்துறையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க புதிதாக சேர்ந்துள்ள 500 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் அந்த நிகழ்வுக்கு வந்ததால், அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, வெளியியே வேறு மாதிரி கசிந்துள்ளது. விபரம் தெரிந்ததும், பாதுகாப்பு படையினர் திரும்பச் சென்றனர்.
இதனால், உளவுத்துறைக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது.
ஆனாலும் விட்டுக் கொடுக்காமல், இது போன்ற நிலை ஏற்பட்டால் பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனரா என்பதை உறுதி செய்யவே, இந்த பயிற்சி நடத்தப்பட்டதாக கூறி அரசு நிலைமையை சமாளித்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement