திருவாரூர்: திருவாரூரில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பேசிய போது டிஆர்பி ராஜா கண்கலங்கி பேசிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியடைய செய்தது.
உதயநிதியை போல் டிஆர்பி ராஜா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் திமுகவில் இணைவதற்கு முன்னர் சிறு பிள்ளைகளாக இருந்த போது கருணாநிதியை தாத்தா என்றே அழைத்து பழகினர்.
அந்த வகையில் கருணாநிதியின் புகைப்படம் வைக்கப்பட்ட இடத்திற்கு கீழ் எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா அமர்ந்த போது அந்த புகைப்படத்துடன் ஒரு செல்பி எடுத்தார். அது போல் கருணாநிதியின் பிறந்தநாளின் போது அவர் குறித்து ட்வீட் போடுவார். இப்படி கருணாநிதி மீது அதிக அன்பு வைத்திருக்கும் டிஆர்பி ராஜா, தற்போது தொழில்துறை அமைச்சராகிவிட்டார்.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ முன்னிலையில் நடந்தது. இந்த நிலையில் அமைச்சரானது முதல்முறையாக சொந்த மாவட்டத்திற்கு வந்தார் டி.ஆர்.பி.ராஜா.
அப்போது அவர் கருணாநிதி குறித்து பேசிய போது கண் கலங்கி உருக்கமாக பேசினார். அப்போது அருகே இருந்த அமைச்சர் வேலு அவரை சமாதானப்படுத்தினார். இதையடுத்து அங்கு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தது. மைசூர் – நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் நாகை முதல் தஞ்சை வரையிலான பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.இந்த பணிகள் மிக விரைவில் முடிக்கப்பட்டு சாலை பயன்பாட்டுக்கு வரும் என எ.வ.வேலு தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டி.ஆர்.பாலு எம்பி வரலாற்று நூலை வெளியிட்டார். அந்த நூலை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டிருந்தார். அப்போது பாலுவுக்கும் கருணாநிதிக்கும் இருக்குமான உறவு குறித்து அமைச்சர் துரைமுருகன் பேசினார். இதனால் டி.ஆர்.பாலு கண்கலங்கி அழுதார். ஒரு சம்பவத்தின் போது டி. ஆர் பாலுக்கும் கருணாநிதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது தான் சொல்வதுதான் சரி என டி.ஆர் பாலுவும், தான் சொல்லுவது தான் சரியென கலைஞரும் வாக்குவாதம் செய்தார்கள். அப்போது கோபப்பட்ட கருணாநிதி நான் தலைவனா.? நீ தலைவனா .? நான் சொல்வது தான் சரி என கருணாநிதி கூறியதாக தெரிவித்தார். இதனால் டி.ஆர் பாலு கோபித்துக் கொண்டு சென்றுவிட்டார். பிறகு நன்கு யோசித்த கலைஞர், பாலு சொல்வதுதான் சரி என நினைத்தார்.
உடனே பாலுவை வரவழைத்து நீ சொல்வதுதான் சரி, என்னை மன்னித்துவிடு என்றார் என துரைமுருகன் பிளாஷ்பேக்கை சொல்ல சொல்ல டி.ஆர்.பாலு குலுங்கி குலுங்கி கண்ணீர் விட்டு அழுதார். அவரை அன்று அழுதார். மகன் ராஜா இன்று கலைஞரை எண்ணி அழுதுள்ளார். இதனால் திமுக நிர்வாகிகள் பலர் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.