தருமபுரி: தமிழக அரசு மருத்துவமனைகளில் எச்ஐவி பரிசோதனை உபகரணங்கள் தட்டுப்பாடு நிலவுவதால் பொது மருத்துவ சேவையில் பின்னடைவான சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்டத் தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாய்-சேய் நல மையங்கள் போன்ற அரசு மருத்துவமனைகளில் பிரசவம், விபத்து சிகிச்சை, அவசர சிகிச்சை, காசநோய் மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் ஆகியோருக்கு சிகிச்சை தொடங்கும்போது எச்ஐவி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் நலன், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் ஆகியோரின் நலன் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்த சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கான பரிசோதனை உபகரணங்கள் அடங்கிய ‘கிட்’-கள் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மூலம் மாவட்ட தலைமையகங்களுக்கு மாதம்தோறும் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அரசு மருத்துவமனைகளின் தேவைக்கான மருந்துப் பொருட்களை இருப்பு வைக்க மாவட்டம்தோறும் அமைந்துள்ள கிடங்குகளுக்கு சென்று சேரும் இந்த உபகரணங்கள் பின்னர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் தேவைக்கு ஏற்ப பிரித்து அனுப்பப்படும். இந்த விநியோகத்தில் கடந்த 2 மாதங்களாக ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பொது மருத்துவ சேவையில் பின்னடைவான சூழல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்களில் பணியாற்றுவோர் கருதுகின்றனர்.
இதுகுறித்து, சுகாதாரத் துறையில் பணியாற்றும் சிலர் கூறியது: எச்ஐவி பரிசோதனைக்கான உபகரணங்கள் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மூலம் ஒப்பந்த முறையில் நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டு தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது. அந்த ஒப்பந்த நடைமுறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் மாவட்டங்களுக்கு போதுமான அளவில் பரிசோதனை உபகரணங்கள் சென்று சேர்வதில்லை. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இந்த தட்டுப்பாடு நீடிக்கிறது. இதற்கு தீர்வு ஏற்பட இன்னும் 1 மாதம் தேவைப்படலாம் என தெரிகிறது.
இன்றைய சூழலில் பொது மருத்துவத் துறையில் மிகமிக அவசியமானதாகக் கருதப்படும் இந்த பரிசோதனை உபகரணங்களின் தட்டுப்பாடு மருத்துவ சேவையின் வேகத்தைக் குறைத்துவிடும். சில ஆண்டுகளுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு செலுத்தப்பட்ட ரத்தம் மூலம் அவருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டதை இந்த நேரத்தில் எண்ணிப்பார்க்க வேண்டும்.
நோயாளிகளின் நலன் கருதியும், அவர்களுக்கு சிகிச்சை அளிப்போர் பாதுகாப்பாகவும், அச்சமின்றியும் குறைபாடில்லாத மருத்துவ சேவை அளித்திட ஏற்ற சூழல் தொடரவும் எச்ஐவி பரிசோதனை உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை உடனே சரிசெய்ய வேண்டும் என்றனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க வட்டார அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியது:
விநியோகம் தொடங்கியது: தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதிலுமே கடந்த சில வாரங்களாக இந்த சிக்கல் இருந்தது உண்மைதான். ஒப்பந்தம் உள்ளிட்டவற்றால் ஏற்பட்ட இந்த தடங்கல் தற்போது சரி செய்யப்பட்டு விநியோகம் தொடங்கியுள்ளது. தமிழகத்துக்கு தேவையான உபகரணங்கள் கடந்த 15-ம் தேதி தமிழகம் வந்து சேரும் வகையில் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.
இருப்பை பதிவேற்றுதல் போன்ற பணிகள் ஓரிரு நாட்களில் முடிந்ததும் வழக்கம்போல் மாவட்டங்களுக்கான விநியோகம் தொடங்கிவிடும்’ என்றனர்.