கொழும்பு:
இந்தியப் பெருங்கடலில் இருக்கும் முக்கிய தீவு நாடான இலங்கையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீனா, அமெரிக்கா இடையே கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில், அந்நாட்டுக்கு எந்த விதத்திலும் தீங்கு நினைக்காத இந்தியாவின் பிடிக்குள் அந்நாட்டின் முக்கியப் பகுதி வரவுள்ளது. ஆம். இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமான செந்தில் தொண்டைமான் என்ற தமிழர் இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்றுள்ளார்.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கித் தவித்து வருகிறது. தவறான பொருளாதாரக் கொள்கை, கொரோனா ஊரடங்கு, அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியது ஆகியவையே இலங்கையின் இந்த நிலைமைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதற்கு ஒருவிதத்தில் சீனாவும் முக்கிய காரணம்.
இலங்கையால் திரும்பித் தர முடியாது எனத் தெரிந்தும், கோடிக்கணக்கிலான பணத்தை கொடுத்து, தற்போது அந்த கடனுக்காக அந்நாட்டில் பெரும் நிலப்பகுதிகளை அபகரித்துக்கொண்டு அங்கு துறைமுகம் உள்ளிட்டவற்றை அமைத்து வருகிறது.
சீனா – அமெரிக்கா ஆதிக்க மோதல்:
அது போதாதென்று இந்தியப் பெருங்கடலையும் முழுவதுமாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீனா முயற்சி செய்து வருகிறது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியாவும், அமெரிக்காவும் முட்டுக்கட்டை போட்டு வருகின்றன. இதனால் இந்தியா, அமெரிக்கா மீது சீனா கடுங்கோபத்தில் உள்ளது. மேலும், இலங்கை அரசாங்கத்திடம் தனது செல்வாக்கை பயன்படுத்தி அண்டை நாடான இந்தியாவை பகையாக்கும் முயற்சியிலும் சீனா ஈடுபட்டு வருகிறது.
செந்தில் தொண்டைமான்:
இதனால் கொஞ்சம் கொஞ்சமாக சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் இலங்கை சென்றுவிடும் சூழல் உருவாகியது. இது இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்பட்டது. இந்நிலையில்தான், இலங்கையின் அதிக வளமும், செல்வமும் கொழிக்கும் மாகாணமான கிழக்கு மாகாணத்தில் செந்தில் தொண்டைமான் என்ற தமிழர் பதவியேற்று இருக்கிறார். அதேபோல, இலங்கை வட மாகாண ஆளுநராக பி.எம்.எஸ். சார்லஸ், வடமேற்கு மாகாண ஆளுநராக லட்சுமண யாப்பா ஆகியோர் பதவியேற்று இருக்கின்றனர்.
இந்தியாவுக்கு ஆதரவானவர்:
இவர்களில் செந்தில் தொண்டைமான் இந்தியாவுக்கு மிக நெருக்கமானவர். பிரதமர் நரேந்திர மோடியிடம் நல்ல நட்பு பாராட்டக்கூடியவர் ஆவார். எனவே, கிழக்கு மாகாணத்தில் ஆளுநராக பொறுப்பேற்றிருப்பதால் இந்தியாவுக்கு அப்பகுதியில் செல்வாக்கு அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தான் திரிகோணமலை இயற்கை துறைமுகம் அமைந்துள்ளது.
இந்தியாவின் செல்வாக்கு:
அதிக அளவில் கடல்வழி வணிகமும், கனிமங்களும் நிறைந்த பகுதி என்பதால் இந்த மாகாணத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அமெரிக்காவும், சீனாவும் முயற்சி செய்தன. ஆனால், தற்போது இந்தியாவுக்கு மிக நெருக்கமான செந்தில் தொண்டைமான் ஆளுநராக பொறுப்பேற்றுள்ளதால், அந்த மாகாணத்தில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரிக்கும் என சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் செந்தில் தொண்டைமான், ஊவா மாகாணத்தின் முன்னாள் அமைச்சராவும், முன்னாள் முதலமைச்சாரகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.