புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் மிகவும் பிரபலமான 3,000 ரவுடிகள் கடந்த 3 வருடங்களில் தண்டனைக்குள்ளாக்கப் பட்டது அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சாதனையாகக் கருதப்படுகிறது.
குற்றச்செயல்களுக்கு பெயர் போன உ.பி.யின் பெயரை மாற்றும் முயற்சியில் முதல்வர் யோகி துவக்கம் முதல் தீவிரம் காட்டி வருகிறார். இதுவரை இல்லாத வகையில் இம்மாநிலத்தில் ரவுடிகள் மீதான குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.
இந்த தகவல், உ.பி. மாநில வழக்குகளின் இயக்குநரகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 2020 முதல் 2022-ம் ஆண்டு வரையில் வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
ஆயுதங்கள் தடுப்பு சட்டத்தின்படி பதிவான வழக்குகளில் 10,520 ரவுடிகளுக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. போக்ஸோ சட்டத்தின் கீழ், 4,078 பேர்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. பாலியல் பலாத்கார வழக்குகளில் சிக்கிய 1,218 பேர்களுக்கும் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் புரிந்த 8,646 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கொலைக் குற்றங்கள் செய்த 2,387 பேருக்கும், வரதட்சணை தொடர்பான காரணங்களால் கொலை செய்த 1,152 பேருக்கும் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 1,141 பேரும், பசுவதை தடை சட்டத்தின் கீழ் 279 பேரும் தண்டனைக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
அதேபோல், பல்வேறு குற்றச்செயல் புரிந்தவர்கள் மீது உ.பி.காவல்துறை 1,256 என்கவுன்ட்டர்கள் செய்துள்ளது. இதில், 21 ரவுடிகள் பலியாக, எஞ்சிய பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 184 பேர் மீதான வழக்குகளில் உ.பி. நீதிமன்றங்கள் விசாரித்து தண்டனை விதித்துள்ளன.
இது குறித்து உ.பி. மாநில வழக்குகளின் இயக்குநரகத்தின் தலைமை அதிகாரியான அசுதோஷ் பாண்டே ஏடிஜி கூறும்போது: ‘குற்றச்செயல்கள் புரிந்தவர்கள் தண்டனைக்குள்ளாக்கப்படுவது சமீப ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
இதற்கு உ.பி. காவல் துறையின் சிறந்த விசாரணையும், முன்வைத்த சாட்சியங்களும் முக்கிய காரணமாக உள்ளன. 2020 ஆம் ஆண்டில் துவங்கி 2022 வரை குற்றச்செயல் புரிந்தவர்களின் வழக்குகளில் தீர்ப்புகள் வெளியாவது படிப்படியாக பல நூறு சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அசுதோஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.
ரவுடிகளை கைது செய்ய வேண்டும் என்பது முதல்வர் யோகியின் முதல் விருப்பமாக உள்ளது. பல முக்கிய ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் அவர்களது சொத்துகளும் அரசின் உடமையாக்கப்பட்டுள்ளன.
இந்தவகையில் கைப்பற்றப் பட்ட சொத்துக்களின் மதிப்பு மட்டும் ரூ.1,849.48 கோடி அளவுக்கு உள்ளது. இதில் இதுவரையும் சுமார் 12,500 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3,903 பேர் குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளனர். 126 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கீழ் சிறையில் தள்ளப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் தேசிய குற்றப்பதிவு நிறுவனம் (என்சிஆர்பி) சார்பில் உ.பி. அரசுக்கு 2021, 2022-ம் ஆண்டுக்கான வழக்கு விசாரணைகளில் சிறந்த செயல்பாட்டுக்கான விருது வழங்கப்பட்டது.
காணொலி மூலமான விசாரணைகளில் சிறந்து விளங்கியதற்காகவும் உ.பி. அரசுக்கு என்சிஆர்பி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.