சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அரை மணி நேரம் எடப்பாடி பழனிசாமியே பேசியுள்ளார். இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பேசிய முக்கியமான 5 விஷயங்கள் தொடர்பான தகவல்கள் கசிந்திருக்கின்றன.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச் சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரடியாக தலையிட வலியுறுத்தி, எம்எல்ஏக்களுடன் சென்று அதிமுக சார்பில் மனு அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், மதுரையில் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள அதிமுக பொன்விழா மாநாடு குறித்தும், அதுதொடர்பாக செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், பூத் கமிட்டி பணிகள் தொடர்பாக மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறாராம்.
எடப்பாடி பேசியது : மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுமார் அரை மணி நேரம் பேசியுள்ளதாக அதிமுக வட்டார தகவல்கள் கூறுகின்றன. எடப்பாடி பழனிசாமி பேசும்போது, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், கட்சி ரீதியாக நமக்கு இருந்த எல்லா தடைகளும் நீங்கிவிட்டன. தேர்தல் ஆணையம் நாம் கொண்டு வந்த கட்சி சட்ட விதி திருத்தங்களை முழுமையாக ஏற்றுக்கொண்டு விட்டது. இனி சட்ட ரீதியாக நமக்கு எந்தச் சிக்கல்களும் வராது எனக் கூறியுள்ளாராம்.
1. இப்போது நமது ஒரே பணி கட்சியை பலப்படுத்த வேண்டியதுதான். பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை தீவிரப்படுத்துங்கள். ஏற்கனவே நான் அறிவுறுத்தி இருப்பது போல, ஒவ்வொரு பூத்திலும் பெரும்பான்மை சமுதாயத்தினர், தலித் சமுதாயத்தினர், பெண்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் கொடுங்கள். கட்சிக்கு வேலை பார்க்கும் ஆர்வமுள்ள, சுறுசுறுப்பான நிர்வாகிகளை பூத் கமிட்டிகளில் நியமனம் செய்யுங்கள் என ஈபிஎஸ் பேசியுள்ளாராம்.
எடப்பாடி போட்ட ஆர்டர் : 2. மதுரையில் நடைபெறவுள்ள மாநாட்டுக்கான ஏற்பாடுகள் பற்றி பேசிய எடப்பாடி பழனிசாமி, ஆகஸ்ட் மாதம் நாம் மதுரையில் நடத்தப்போகும் மாநாடு எல்லோருக்கும் பதில் சொல்லும் வகையில் இருக்க வேண்டும். நமது கட்சியின் உண்மையான பலம் என்ன என்பதை நிரூபிக்கிற வகையில் இருக்க வேண்டும். மதுரை மாநாட்டுக்காக இப்போதிலிருந்தே சுவர் விளம்பரங்களை தொடங்குங்கள் என கட்டளை இட்டுள்ளாராம்.
3. நான் இனி எல்லா மாவட்டங்களுக்கும் வரப்போகிறேன். நான் செல்லும் இடங்களில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் சுவர் விளம்பரங்கள் இருக்க வேண்டும். இப்போதிலிருந்தே சுவர்களை பிடிக்க ஆரம்பியுங்கள், மாவட்டங்களில் இருக்கும் அடிப்படை பிரச்சனைகளுக்கு எதிராக போராட்டங்களை நடத்துங்கள் என்று மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
கையில் எடுங்க : 4. மேலும், திமுக அரசு, அரசு ஊழியர்களில் இருந்து அனைத்து தரப்பினரிடமும் கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. இதுதான் நமக்கு நல்ல வாய்ப்பு. ஸ்டாலின் செய்யும் ஒவ்வொரு தவறும் நம்மை மீண்டும் ஆட்சியில் அமர வைக்கும். இப்போது நடக்கிற கள்ளச்சாராய மரணங்கள் பற்றி மக்களிடம் தொடர்ந்து எடுத்துச் செல்லுங்கள்.
5. அமைச்சர் பிடிஆர் பேசிய ஆடியோ விவகாரத்தை தொடர்ந்து நாம் பேசிக்கொண்டிருக்க வேண்டும். அவர் துறை மாற்றப்பட்டிருப்பதற்கு காரணம் அந்த ஆடியோ தான். திமுக அமைச்சரே முதலமைச்சரின் குடும்பம் எவ்வளவு சம்பாதித்திருக்கிறது என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அதை நாம் சரியாக மக்களிடம் கொண்டு சென்று விவாதத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளாராம் ஈபிஎஸ்.
அதிமுக வெளியிட்ட அறிக்கை : இந்தக் கூட்டம் தொடர்பாக அதிமுக தலைமை கழகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், தலைமைக் கழகம் – புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்டக் கழகச் செயலாளர்களும், பிற மாநிலக் கழகச் செயலாளர்களும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், கழகத்தில் ஏற்கெனவே உறுப்பினர்களாக பணிகளை துரிதப்படுத்துவது குறித்தும் இருப்பவர்களின் பதிவை புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்த்தலுக்கான பணிகளை தீவிரப்படுத்துவது, வருகின்ற 20.8.2023 அன்று மதுரையில் நடைபெற உள்ள கழக மாநாட்டை எழுச்சியுடன் நடத்துவது குறித்தும் கழகப் பணிகளை விரைந்து ஆற்றுவது குறித்தும் எடப்பாடி பழனிசாமி விரிவாக ஆலோசனை வழங்கினார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.