புதுடெல்லி: கருப்பை அகற்றம் குறித்த தரவுகளை மாநில அரசுகள், மத்திய அரசோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ஏழைகள், குறைவான கல்வியறிவு உள்ள பெண்கள், குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்த பெண்கள் அவசியமின்றி கருப்பை அகற்றும் ஆபத்தில் உள்ளனர். சில மருத்துவ நிறுவனங்களால் செய்யப்படும் இத்தகைய தேவையற்ற கருப்பை நீக்க அறுவை சிகிச்சைகளை தடுக்கும் நோக்கில் மாநில அரசுகள் செயல்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருப்பை அகற்ற அறுவை சிகிச்சைகளை அரசு மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் மேற்கொள்ள முடியும் என்பதால், இத்தகைய காப்பீட்டுத் திட்ட நிதியைப் பெற சில தனியார் மருத்துவமனைகள் அவசியமின்றி பெண்களின் கருப்பை அகற்ற அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதாகவும் இதை தடுக்க உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
டாக்டர் நரேந்திர குப்தா என்பவர் கடந்த 2013ம் ஆண்டு இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அவர் தனது மனுவில், “நான் மேற்கொண்ட களப்பணியின் அடிப்படையில் கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படக் கூடாத, மாற்று சிகிச்சை அளிக்கப்படக்கூடிய பெண்களுக்கு கருப்பை நீக்கம் செய்யப்பட்டு, அவர்களின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வகையான கருப்பை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண்களில் பெரும்பாலானவர்கள் எஸ்சி, எஸ்டி, ஒபிசி சமூகங்களைச் சேர்ந்தவர்கள். பல்வேறு உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் அரசாங்கங்களிடமிருந்து அதிக காப்பீட்டுக் கட்டணங்களைப் பெறும் நோக்கோடு, பல சுகாதார நிறுவனங்கள் இத்தகைய நடைமுறையை தவறாகப் பயன்படுத்துகின்றன” என நரேந்திர குப்தா தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, தேவையற்ற கருப்பை நீக்கத்தை தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த 2022ம் ஆண்டு வெளியிட்டது. இந்த வழிகாட்டுதல்களை மருத்துவமனைகள் கடைப்பிடிக்கின்றனவா என்பதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளை மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியது.
இதன் தொடர்ச்சியாக, மத்திய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷண், மாநில சுகாதாரச் செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், “கருப்பை நீக்கம் தொடர்பான விவகாரத்தை மத்திய அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டதற்கு முன்பும், வெளியிட்டதற்குப் பின்பும் கருப்பை அகற்றம் குறித்த தரவுகளை மாநில அரசுகள் மத்திய அரசோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து கருப்பை அகற்றம் குறித்த தகவல்களும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தார்.
இதனிடையே, இது குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேவையற்ற கருப்பை அகற்றம் நடந்துள்ளதா என்பது குறித்து 3 மாதங்களுக்குள் மாநில அரசுகள் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும், மத்திய சுகாதாரத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை அவை பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
வளர்ந்த நாடுகளில் பொதுவாக 45 வயதுக்கு மேற்பட்ட மாதவிடாய் நின்ற பெண்களுக்கு கருப்பை நீக்கம் செய்யப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 28 வயது முதல் 36 வயது வரை உள்ள இளம்பெண்களிடையே கருப்பை அகற்றம் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.