மரக்காணம் அருகே எக்கியார் குப்பம் மீனவ கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் பலியாகியுள்ளனர். பலர் உடல் நலக்குறைவால் விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயத்தால் 20க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதற்கு திமுக அரசே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
விழுப்புரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்த முன்னாள் முதல்வர்
கள்ளச்சாராயத்தால் நிகழ்ந்த மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார். ஸ்டாலின் ஆட்சியில் கள்ளச்சாராயம் தடையின்றி கிடைப்பதாவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
இதற்கு திமுக அமைச்சரான பொன்முடி கடும் கண்டனம் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவருடைய பதவியை ராஜினாமா செய்தாரா என கேள்வி எழுப்பிய அவர், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று கூட பார்க்கவில்லை என விளாசினார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலினை பதவி விலக கூறுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சீமான், கொடநாடு கொலைக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி அப்போது ராஜினாமா செய்திருக்க வேண்டும் என கூறினார். மேலும் 24 மணி நேரமும் மின்சார சப்ளை இருக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டில் ஒரு மணி நேரம் பவர் கட் ஆனது எப்படி என்றும் 6 பேர் கொலை செய்யப்பட்டது எப்படி என்றும் கேள்வி எழுப்பினார் சீமான்.
முன்னாள் முதல்வர் வீட்டிலேயே பாதுகாப்பு இல்லாத போது எங்களுக்கு என்ன பாதுகாப்பு என்று கேள்வி எழுப்பிய சீமான், இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டு சொல்வது வழக்கம் என விளாசினார். மேலும் நீங்கள் இருவரும் அந்த கள்ளச்சாராயத்தை குடிச்சிட்டு போங்க நான் உங்கள் குடும்பத்திற்கு 10 கோடி ரூபாய் தருகிறேன், உங்கள் பணத்தை எடுத்தே கொடுக்கிறேன் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நக்கலடித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கொடநாடு கொலை வழக்கு குறித்து 2 மாதங்களில் விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வருவேன் என்ற ஸ்டாலின் இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் வாய் திறக்காமல் உள்ளார் என்றும் விளாசினார். மேலும் திமுக அரசில் கட்டப்பட்ட பள்ளிக்கூடம், பாலம் எல்லாம் உடைந்து விழுகிறது என்று குறிப்பிட்ட சீமான், இதுதான் திராவிட மாடல், இந்த தரத்தில்தான் பேனா கட்டுவீங்களா என்றும் சாடினார்.