கடலூரில் கழிவறை ஓட்டைக்குள் விழுந்து சுமார் 8 அடி ஆழத்திற்குள் குழாயில் சிக்கிக் கொண்ட நாய் குட்டி ஒன்றை 12 மணி நேர தீவிர முயற்சிக்கு பின்னர் போராடி உயிருடன் மீட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது..
கடலூர் சாவடி பகுதியைச் சேர்ந்ந முருகனின் வீட்டுத் தோட்டத்தில் உள்ள கழிவறை அருகே நாய் ஒன்று 3 குட்டிகள் போட்டிருந்தது. அதில் ஒரு குட்டி அதிக பயன்பாடு இல்லாத கழிவறைக்குள் விளையாடிக் கொண்டே சென்று கால் வழுக்கிச் ஓட்டைக்குள் விழுந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கழிவுகள் வெளியே செல்லும் குழாயில் மாட்டிக் கொண்ட அந்த நாய்க்குட்டியின் முனகல் சத்தத்தை கேட்ட முருகன், விலங்கு நல ஆர்வலர் செல்லா என்பவருக்கு தகவல் கொடுத்து அவரது உதவியை நாடினார்.
குழாயில் சிக்கிய நாய்க்குட்டியை கழிவறை ஓட்டை வழியாக வெளியே எடுக்க முயற்சித்தது பலனளிக்கவில்லை. கழிவறையை உடைத்தால் தான் குட்டியை காப்பாற்ற முடியுமென்ற நிலையில் கழிவறையை முழுவதுமாக உடைத்து தோண்டி துளையிட்டு பார்த்த போது, சுமார் 8 அடி ஆழத்தில் அந்த குட்டி சிக்கியிருப்பது தெரியவந்தது.
குழாயை உடைத்த செல்லா உள்ளே சிக்கியிருந்த நாய்க்குட்டியை சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்டார்.
பின்னர், அந்த நாய்க்குட்டியை தனது கைளாலேயே குளிப்பாட்டி சுத்தப்படுத்தவும் செய்தார் செல்லா. சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக குழாயில் சிக்கியிருந்த குட்டி வெளியே வந்ததும் தனது தாயின் அரவணைப்பைத் தேடிச் சென்றது.